திரு. கோலித தர்மவர்தன

திரு. தர்மவர்தன அவர்கள் 1986 ஆம் ஆண்டில் தகவல் தொழிநுட்பப் பேரவையில் (CINTEC) சட்டமும் கணினிகளுக்குமான குழுவில் உறுப்பினராவார். இவர் சட்டமா அதிபர் திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இலங்கை தகவல் தொழிநுட்ப முகவர் நிலையத்தின் முன்னோடியான தகவல் தொழிநுட்பவியல் பேரவையினால் (CINTEC) “கணினிகள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பாக நாட்டின் நீதித் துறைக்கு அறிமுகப்படுத்த வேண்டிய வழிமுறைத் திட்டங்களை வகுத்தல் மற்றும் அவற்றை சட்டமயப்படுத்துவதற்குத் தேவையான தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்………” என்பவற்றுக்காக சட்டமும், கணினிகளுக்குமான குழு தாபிக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்ப பாவனையின் ஊடாக உருவாகக் கூடிய புதிய சூழ்நிலையுடன் பணியாற்றக் கூடிய சாத்தியக்கூறுகளை உறுதி செய்வதற்கு ஆதாரச் சட்டத்தை மீளாய்வு செய்வதன் அவசியத்தை குழு ஆரம்பத்திலேயே உணர்ந்திருந்தது. சட்டங்களை வகுப்பதற்கான திட்டங்களைத் தயாரிக்கும் முக்கிய பொறுப்பு திரு. தர்மவர்தன அவர்களிடம் வழங்கப்பட்டது. கணினிகள் மற்றும் பிற இலத்திரனியல் சாதனங்களால் உருவாக்கப்பட்ட தகவல்களை ஏற்றுக் கொள்வது குறித்து இந்தப் பணி முடிவுறுத்தப்பட்டதுடன், அதன் விளைவாக 1995 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க ஆதாரச் (விசேட ஏற்பாடுகள்) சட்டம் அங்கீகரிக்கப்பட்டது.

சுருக்கமான காணொளி

முழுமையான காணொளி


தகவல் தொழிநுட்பப் பேரவையின் (CINTEC) சட்டமும் ணினிகளுக்கான குழு:

இலங்கை கணினி மற்றும் தகவல் தொழிநுட்பப் பேரவையின் செயற்பாடான குழுவாக 1986 இல் சட்டமும் கணினிகளுக்குமான குழு நிறுவப்பட்டது, இது பின்னர் தகவல் தொழில்நுட்பப் பேரவை (CINTEC) எனப் பெயரிடப்பட்டது. 1986 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்ற முதலாவது கூட்டத்தில், அக் குழுவை நிறுவியமைக்கான அடிப்படைக் காரணம் குறித்து கலந்துரையாடப்பட்டது. “…… சில ஆண்டுகளில் கணினி தொழில்நுட்பம் தொடர்பான விடயங்கள் முக்கிய சட்டச் சிக்கல்களாக மாறக்கூடும். கணினிகள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் குறித்து நாட்டின் சட்டத் தொகுதியினுள் பொருத்தமான நடைமுறைகளை வகுத்தல் மற்றும் அவற்றை அமுல்படுத்துவது குறித்து ஆராய்ந்து பார்த்தல், தகவல் தொழிநுட்பத்தின் பரவலான பாவனை மற்றும் அபிவிருத்தியை மேம்படுத்தல் ஆகியன இக் குழுவை தாபிப்பதற்கான பிரதான நோக்காக அமைகின்றன.

 
அந்நாள் சிரேஷ்ட அரச சட்டத்தரணியான திரு. கோலித தர்மவர்தன, இக் குழுவில் சட்ட மாஅதிபர் (AG) திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார். தகவல் தொழிநுட்பப் பேரவையின் (CINTEC) தலைவராக பணியாற்றிய பேராசிரியர் திரு வி. கே. சமரநாயக்க அப்போதைய மேலதிக மன்றாடியார் நாயகமான திரு சுனில் த சில்வா அவர்களிடம் இக் குழுவுக்கு சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதியை ஒருவரைப் பெயரிடுமாறு கேட்டுக் கொண்டதற்கு அமைய திரு தர்மவர்த்தன பெயரிடப்பட்டார்.
பல ஆண்டுகளாக இந்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த செயற்பாடான குழுவின் ஏனைய உறுப்பினர்களாக தகவல் தொழிநுட்பப் பேரவையின் (CINTEC) தலைவர் பேராசிரியர் வி. கே. சமரநாயக்க, தேசிய அறிவுசார் சொத்துக்கள் அலுவலகத்தின் பணிப்பாளர் கலாநிதி டி. எம். கருணாரத்ன, மன்றாடியார் நாயகம் சனாதிபதி சட்டத்தரணி திரு. உபவங்ஷ யாப்பா, நீதி அமைச்சின் செயலாளர்களாக பணியாற்றிய திரு. பி. பி. ஹேரத் மற்றும் திருமதி தாரா விஜயதிலக, சட்ட பீடத்தின் பீடாதிபதிகளாக பணியாற்றிய கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க மற்றும் திரு. என். செல்வக்குமாரன், சட்ட வரைபுத் திணைக்களத்தின் திரு. நலின் அபேசேகர மற்றும் திருமதி. தெரேஸ் பெரேரா, சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் திரு. டபிள்யூ. பி. ஜி. டெப், வங்கித் துறையின் தகவல் தொழில்நுட்பவியலாளர் திரு லால் டயஸ், பொலிஸ் திணைக்களத்தின் திரு. பி. கே. ஜி. நவரத்ன, சனாதிபதி சட்டத்தரணி திரு கே. கனகீஸ்வரன் மற்றும் உத்தரவுப் பத்திரங்கள் மற்றும் அன்னியச் செலவாணி ஆணைக்குழுவின் பிரதிநிதிகளும், பங்குச் சந்தையின் பிரதிநிதிகளும் செயற்பட்டனர்.


1995 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க ஆதாரச் (விசேட ஏற்பாடுகள்) சட்டம்

தகவல் தொழிநுட்பப் பேரவையின் சட்டமும் கணினிகளுக்குமாக குழுவினால் இலங்கையின் ஆதாரச் சட்டத்தை மீளாய்வுக்கு உட்படுத்தல் மற்றும் திருத்தம் செய்வதே அதன் முதலாவது பணியாக அமைந்தது.
 
கணினி மற்றும் தகவல் தொழிநுட்பப் பாவனையின் போது உருவாகக் கூடிய புதிய நிலைமைகளின் கீழ் ஆதாரச் சட்டத்தை அமுல்படுத்த முடியுமா என்பதை உறுதி செய்து கொள்வதற்காக ஆதாரச் சட்டத்தை பரிசீலிக்கும் அவசியம் உண்டென்பதை ஆரம்பத்தில் இருந்து இக் குழு உணர்ந்திருந்தது. இங்கு தீர்வு காணப்பட வேண்டிய தீவிரமான பிரச்சனை ஒன்று காணப்பட்டது. ஆதாரச் சட்டத்துக்கு அமைய ஒரு மனிதரால் செய்யப்பட்ட வாக்குமூலம் ஒன்றோ அல்லது மனிதனால் தயாரிக்கப்பட்ட ஆவணம் ஒன்றோ ஆரம்ப ஆதாரமாக இருத்தல் அவசியமாகும். உண்மையிலேயே வேறு எந்தத் தடயங்களும் ஆதாரச் சட்டத்துக்கு அமைய சாட்சியாக அமையாது. இது பாரதூரமான பிரச்சனைக்கு வழிவகுக்கக் கூடுமென குழு ஒப்புக் கொண்டது. மனிதன் நேரடியாக ஈடுபடாத, கணினியின் மூலம் மேற் கொள்ளப்படும் சிற்சில செயலாக்கச் செயற்பாடுகள் உள்ளன. உதாரணமாக பல்வேறு நபர்களால் பலதரப்பட்ட கொடுக்கல் வாங்கல் குறித்தான தகவல்கள் கணினிக்கு வழங்கப்பட்டதன் பின்னர், கணினியினால் முழு ஆவணமும் தொகுக்கப்படும். எனவே, அதனுடன் சம்பந்தப்பட்ட அனைத்து நபர்களையும் அழைக்காமல், பெறுபேற்று அறிக்கையை ஆதாரமாக ஏற்றுக் கொள்வதற்கு விசேட ஏற்பாடுகள் தேவைப்பட்டன. அசல் சான்றுகள் நீதிமன்றத்துக்கு வருகை தர வேண்டும் என்று எதிர்ப்புக்கள் முன்வைக்கப்படுமானால், பாரதூரமாக பிரச்சனை எழக் கூடுமெனவும், ஆவணத் தயாரிப்பின் போது மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு பரிவர்த்தனையையும் விளக்குவதற்கு அதனுடன் சம்பந்தப்பட்ட அனைவரையையும் நீதிமன்றத்திற்கு அழைப்பது நடைமுறைக்கு மாறானதாக அமையும். தற்போது ஒரு குறிப்பிட்ட தகவல் தொடர்பாக அதனுடன் சம்பந்தப்பட்ட குறிப்பிட்ட எழுத்தாளரை அடையாளம் காண்பது கடினமாகும்.
 
இரண்டு சட்டக் கோட்பாடுகளின் அடிப்படையிலேயே அனைத்து ஆதாரக் கட்டளைச் சட்டங்களும் உள்ளன. ஒன்று சிறந்த ஆதார விதி; எந்தவொரு விடயம் தொடர்பாகவும் ஆதாரம் இருக்குமாயின், அது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய சிறந்த ஆதாரமாக இருக்க வேண்டும். ஒரு ஆவணத்தைப் பொறுத்தவரை, மூல ஆவணம் அன்றி பிரதியை நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்தல் ஆகாது என்பதே இதனால் பொருள்படும். மற்றைய விதி செவிவழி (hearsay) விதி; நீதிமன்றத்துக்கு மூல அறிக்கையை மாத்திரமே வழங்க வேண்டும். உதாரணமாக, நபர் ஒருவர் ஏதேனுமொன்றை கண்டிருப்பின், அதைக் கண்டவர் நீதிமன்றத்திற்கு வந்து தான் கண்டதை விளக்க வேண்டும். மூன்றாம் தரப்பினர் நீதிமன்றத்திற்கு வந்து, “இந்த நபர் இதைப் பார்த்ததாக என்னிடம் கூறினார்” என்று கூற முடியாது. ஒரு நபர் ஒரு ஆவணத்தை உருவாக்கி அதன் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்துவாரானால், நீதிமன்றத்துக்கு நிஜமாகவே அந்த ஆவணத்தை உருவாக்கிய நபரின் வருகை எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஆகையால், ஆதாரச் சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும் எனக் குழு தீர்மானித்தது. அதன் பிறகு, தகவல் தொழிநுட்பப் பேரவை (CINTEC) வங்கித் துறை மற்றும் அரச துறை போன்ற பல்வேறு துறைகளுக்கு இந்த விடயத்தினை எடுத்துரைப்பதற்காக தொடர்ச்சியான கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்தியது. பூரண உடன்பாடு இருக்க வேண்டும் என்பதே பேராசிரியர் சமரநாயக்கவின் கருத்தாக அமைந்தது. அதன் விளைவாக, சில மாதங்களுக்குப் பிறகு, ஆதாரச் சட்டம் விரிவாக திருத்தப்பட வேண்டும் என பொதுவான இணக்கம் காணப்பட்டது. ஆலோசனை அடிப்படையில் இந்தப் பணியும் திரு. தர்மவர்தனவிடம் ஒப்படைக்கப்பட்டது.
 
ஆதாரச் சட்டத்தை திருத்துவதற்கும் புதிய ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துவதற்கும் விரிவான திட்டங்களைத் தயாரிக்குமாறு திரு. தர்மவர்தனவிடம் குழு கோரிக்கை விடுத்தது. திரு. தர்மவர்தன ஒவ்வொரு கூட்டத்திலும் தான் மேற்கொண்ட ஆய்வுகள் மற்றும் கணினி தொடர்பான சாட்சிகளின் தேவை மற்றும் புதிய சட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்படக் கூடிய சாட்சியங்கள் குறித்து தாம் குழுவிற்கு அறிக்கை அளித்ததை நினைவு கூர்ந்தார். அவர் தகவல் தொழிநுட்பப் பேரவையில் (CINTEC) சட்டமும் கணினிகளுக்கான குழுவின் வழிகாட்டலின் கீழ் முழுமையாகச் செயற்பட்டதுடன், குழு உறுப்பினர்களும் இப் பணிகளில் செயல்பாடான முறையில் பங்களிப்பு வழங்கினர். சட்டமும் கணினிகளுக்குமான குழுவின் கூட்டங்கள் தகவல் தொழிநுட்பப் பேரவை (CINTEC) அலுவலகத்தில் மாதந்தோறும் நடத்தப்பட்டன.
 
திரு. தர்மவர்தனவினால் தயாரிக்கப்பட்ட திட்டங்களை குழு மீளாய்வு செய்து பல பரிந்துரைகளை வழங்கியது. இப் பரிந்துரைகள் விவாதிக்கப்பட்டு முன்மொழிவுகளில் சேர்க்கப்பட்டதுடன், பல்வேறு கருத்தரங்குகளையும், செயலமர்வுகளையும் நடத்தி இவை மீண்டும் பரந்தளவான பார்வையாளர்களிடம் முன்வைக்கப்பட்டன. அதன்பிறகு, கணினிகள் மற்றும் பிற இலத்திரனியல் சாதனங்களால் உருவாக்கப்பட்ட தகவல்களின் அங்கீகாரம் குறித்த இம் முன்மொழிவுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன், 1995 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க ஆதாரச் (சிறப்புவிதிகள்) சட்டம் செயற்குழுவினால் மேற் கொள்ளப்பட்ட இறுதி பெறுபேறாக அமைந்தது.
 
எனினும் தற்போது கூட, இலங்கையினுள் சிறப்பு ஏற்பாடுகள் சட்டம் நிஜமாகவே விவாதிக்கப்பட்டு நேர்மறையான தீர்வுகளை எடுத்த சந்தர்ப்பங்கள் மிகவும் அரிதாக உள்ளதாக திரு. தர்மவர்தன சுட்டிக் காட்டினார்.
 

கணினி குற்றங்கள் தொடர்பான சட்டங்களை வகுப்பதற்கான முன்மொழிவுகள்:

ஆதாரச் சட்டம் குறித்த செயற்திட்டத்தை பூர்த்தி செய்த பின்னர், குழுவானது கணினிகள் மற்றும் குற்றங்கள் எனும் விடயத்தை எடுத்துரைக்க ஆரம்பித்தது. குற்றவியல் சட்டத்தின் கீழ் செயற்படுத்த முடியாத பல்வேறு வகையான புதிய சிக்கல்கள் மற்றும் நிகழ்வுகள் இருக்கலாம் என்பது குழுவின் கருத்தாக அமைந்தது. குற்றவியல் சட்டம் பாரம்பரிய முறையில் உருவாக்கப்பட்டிருந்தது; அது பௌதீக சொத்துக்களுடனேயே செயற்பட்டது. அதாவது, காணக்கூடிய மற்றும் தொடக்கூடிய சொத்துகளாகும். அல்லது ஒரு மனிதனுக்கு ஏற்பட்ட காயம் அல்லது தீங்கு இச் சட்டத்தின் மூலம் உள்வாங்கப்படுகிறது.. பௌதீக சொத்துக்களுக்கு இழைக்கும் சேதத்தை விட கடுமையான சேதத்தை கணினியின் ஊடாக மேற் கொள்ள முடியும் என்பதால் ஆரம்பத்தில் காணப்பட்ட சிக்கல் மீண்டும் ஏற்பட்டது. எனவே, கணினிக் குற்றங்கள் தொடர்பில் செயற்படுவதற்கு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதன் அல்லது புதிய சட்டத்தின் அவசியத்தை குழு இனங்கண்டது.
 
1995 ஆம் ஆண்டு திரு. ஜெயந்த பெர்னாண்டோ அவர்கள் திரு. கோலித தர்மவர்தன அவர்களுக்கு அறிமுகமானார். பின்னர் திரு. ஜெயந்த பெர்னாண்டோ, திரு. கோலித தர்மவர்தனவின் வழிகாட்டுதலின் கீழ் கணினி பயன்பாட்டில் நிகழும் அச்சுறுத்தல்ளையும், துஷ்பிரயோகங்களையும் எதிர் கொள்வதற்கு நடைமுறையில் உள்ள குற்றவியல் சட்டம் போதுமனதா என்பதைக் கண்டறிவதற்காகவே கணினி சார்ந்த குற்றங்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டார். தகவல் தொழிநுட்பம் மற்றும் சட்டம் சார்ந்த துறையில் ஈடுபட்ட திரு ஜயந்த பிரனாந்து இறுதியில் இந்தத் துறையில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஒருவராகத் திகழ்ந்தார் என திரு. கோலிததர்மவர்தன சுட்டிக் காட்டினார்.
 
கணினி குற்றங்கள் தொடர்பான சட்டத்தை வகுப்பதற்கான திட்டங்களைத் தயாரிப்பதே தகவல் தொழிநுட்பப் பேரவையின் (CINTEC) இந்தக் விசேட செயற்திட்டத்தின் நோக்கமாக அமைந்தது. இதற்காக சட்டத்தில் உள்ள இடைவெளிகளைக் இனங்காணுதல் மற்றும் கணினி சார்ந்த குற்றங்கள் தொடர்பான புதிய சட்டக் கோட்பாடுகளை உருவாக்குதல் அவசியமானது. தகவல் தொழிநுட்பப் பேரவை (CINTEC) மூடப்பட்ட பின்னர், அதன் வாரிசான இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிலையம் (ICTA) இந்தப் பணிகளைப் பொறுப்பெற்றுக் கொண்டது. அதன் பணிப்பாளர் / சட்ட ஆலோசகராகப் பணியாற்றிய திரு. ஜெயந்த பிரனாந்துவின் விடய விதானத்தினுள் இப் பணி உள்ளடங்கியது. அதைத் தொடர்ந்து, 2007 மே மாதத்தில் 2007 ஆம் ஆண்டு கணினி குற்றச் சட்டம் அங்கீகரிக்கப்பட்டது. தகவல்களை அனுமதியின்றி மாற்றம் செய்தல், மாற்றுதல் அல்லது நீக்குதல் மற்றும் அணுகலை நிராகரித்தல் போன்றவை இச் சட்டத்தின் கீழ் குற்றங்களாகக் கருதப்பட்டன. அங்கீகாரமுள்ளவர்களின் அணுகலைப் பெறுவதைத் தடுக்கும் வகையில் கணினி அமைப்பு முறையை மாற்றுதல் குற்றமாகும். வைரஸ்கள் மற்றும் தர்க்க குண்டுகள் (logic bombs) போன்றவற்றை உட்சேர்ப்பதன் மூலம் கணினிக்கு சேதம் விளைவித்தல் அல்லது தீங்கு விளைவித்தல், தகவல்களை அனுமதியின்றி நகலெடுத்தல், கணினி சேவைகளை அனுமதியின்றிப் பயன்படுத்துதல் மற்றும் கணினி நிரல், தரவு அல்லது தகவல்களை ஒரு கணினியில் இருந்து மற்றொரு கணினிக்கு அனுப்பும் போது குறுக்கீடு செய்தல் ஆகியவை பிற குற்றங்களில் அடங்கும்.
 

மின்னணு பரிவர்த்தனைகள் தொடர்பான சட்டத்திற்கான முன்மொழிவுகள்:

சட்டத்தின் இந்த விடய விதானம் தொடர்பில் கவனத்தைச் செலுத்துவதன் அவசியத்தை இனங்கண்டு கொண்ட குழு, இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு ஒரு துணைக்குழுவை நியமித்தது, இந்தப் பணியும் இறுதியில் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழிநுட்ப முகவர் நிறுவனத்திடம் (ICTA) ஒப்படைக்கப்பட்டதுடன், திரு. ஜயந்த பிரனாந்து அந்தப் பணிகளில் ஈடுபட்டார். இந்தப் பணி 2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இலத்திரனியல் பரிவர்த்தனைகள் சட்டத்தை அமுல்படுத்துவதுடன் நிறைவடைந்ததாக திரு. தர்மவர்தன குறிப்பிடுகிறார். இந்தச் சட்டம் சர்வதேச வர்த்தக சட்டம் (UNCITRAL), தொடர்பான ஐக்கிய நாடுகளின் ஆணைக்குழுவின் (UNCITRAL) ஈ- வர்த்தகம் தொடர்பான மாதிரிச் சட்டம் (1996) மற்றும் மின் கையொப்பம் தொடர்பான மாதிரிச் சட்டம் (2001) ஆகியவை இதன் நியமங்களாகும்.
 
பல செயல்முறைகளும், விதிகளும் நடைமுறைச் சிக்கல்கள் என திரு. தர்மவர்தன இறுதியில் குறிப்பிடுகிறார். சட்டத்திற்கு இசைந்து தகவல் தொழிநுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு தொழிநுட்பத்துக்கு பின்னோக்கி செல்ல முடியாது என்றும் அவர் குறிப்பிடுகிறார். எனவே, செயற்கை நுண்ணறிவு உட்பட தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழிநுட்பத்துடன் உருவாகியுள்ள பலதரப்பட்ட நிலைமைகள் மனிதனின் தலையீடு இன்றி கணினியின் ஊடாக மேற் கொள்ளப்படும் பல்வேறு செயல்பாடுகளில் இசைவடைய சட்டம் முன்நோக்கிச் செல்ல வேண்டும்.