திரு. நிரஞ்சன் டி சில்வா

திரு. நிரஞ்சன் டி சில்வா அவர்கள் மெற்றோபொலிட்டன் கணினிகள் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். திரு. நிரஞ்சன் டி சில்வா தனது முதல் பட்டப்படிப்பினை மின்னணுப் பொறியியல் துறையில் ஜக்கிய இராச்சியத்திலிருந்து பெற்றுக் கொண்டார். இவர் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக முதுகலை முகாமை நிறுவனத்திலிருந்து (PIM) ஒரு MBA பட்டத்தினைப் பெற்றார். நிரஞ்சன் மெற்றோபொலிட்டன் குழுவில் 1981 ஆம் ஆண்டு ஒரு பொறியியலாளராக இணைந்தார்.

நிரஞ்சன் மெற்றோபொலிட்டனில் சேர்ந்தபோது, வங்கி உபகரணங்களில் ஏகபோக விநியோகஸ்தராக மெட்ரோபொலிட்டன் காணப்பட்டது. உதாரணமாக லெட்ஜர் அட்டைகள் மற்றும் அச்சுப்பொறிகள் ஆகியவற்றைக் கூறலாம். 1982 ஆம் ஆண்டு, இலங்கை வங்கி தமது வங்கி நடவடிக்கைகளை தன்னியக்கமாக்கத் தீர்மானித்தது. 1983 இன் முற்பகுதியில், லெட்ஜர் அட்டைகள் அச்சுப்பொறியுடன் ஒரு கணினி வழங்குமாறு இலங்கை வங்கி கேள்வி அறிவித்தல் விடுத்தது. இதற்கு ஒரு Fujitsu லெட்ஜர் அட்டை அச்சுப்பொறியுடன் ஒரு Canon AS-100 கணினியை மெற்றோபொலிட்டன் வழங்க முன்வந்தது.  திரு. நிரஞ்சன் டி சில்வாவும் அவரது குழுவினரும் மெற்றோபொலிட்டனிற்காக இந்த விலைமனுக்கோரலை வென்றனர். இருப்பினும் அவர்கள் அளிக்கும் தீர்வை நிரூபிக்க அவர்களுக்கு ஒரு வார அறிவிப்பு மட்டுமே, இலங்கை வங்கியினால் வழங்கப்பட்டது. இது ஒரு ஆரம்ப திருப்புமுனையாகும், இது இலங்கை வங்கி  மற்றும் பிற வங்கிகளை கணினிமயமாக்குவதற்கான ஆரம்ப கட்டமாகும்.

திரு. நிரஞ்சன் டி சில்வா தொடங்கிய மற்றொரு சவாலான திட்டம் மின்சாரப் பட்டியலிடல் குறித்த “இணையத்துடனான கட்டணச்சீட்டிடும் முறைமை” ஆகும். இந்தத் திட்டத்தின் மூலம், லங்கா மின்சார கம்பெனி பிரைவேட் லிமிடெட் (LECO) இன் நுகர்வோருக்கு மின்சாரக் கட்டணச்சீட்டு வழங்கப்பட்ட செயல்முறை மாற்றியமைக்கப்பட்டது, இதனால் பில் தபால் மூலம்  அனுப்பப்படுவதற்கு பதிலாக, மின்மானி வாசிப்பாளர் நுகர்வோர் வீட்டிற்கு செல்வதன் மூலம்,  நுகர்வோருக்கு மின்கட்டணச்சீட்டு கிடைத்தது,  இது முன்னர் பின்பற்றப்பட்ட செயன்முறையாக இருந்தது. திரு. நிரஞ்சன் டி சில்வாவும் அவரது குழுவினரும் மெற்றோபொலிட்டனிற்காக இந்த விலைமனுக்கோரலை வென்றனர்.

திரு. நிரஞ்சன் டி சில்வா இலங்கை கணினிச் சமூகத்தின் (CSSL) செயலாளராகவும் இருந்துள்ளார். அவர் இலங்கை கணினிச் சமூகத்தின் பொருளாளராகவும், துணைத் தலைவராகவும் மேலும் அதன் தலைவராகவும் இருந்தார். CSSL இன் கீழ், நிரஞ்சன் ஈடுபட்டிருந்த மிகவும் சவாலான பணிகளில் ஒன்று, 1995 இல் தென்கிழக்கு ஆசியப் பிராந்திய கணினிக் கூட்டமைப்பை (SEARCC) ஏற்பாடு செய்தது ஆகும்.

திரு. நிரஞ்சன் டி சில்வா, மெற்றோபொலிட்டன் குழுவில் அங்கம் வகித்ததில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறுகிறார். ஏனெனில், இது புதிய தொழில்நுட்பம் மற்றும் புதிய தீர்வுகளில் கவனம் செலுத்திய நிறுவனமாக இருந்தது. நிரஞ்சன் தற்போது “ஆடம் இன்னோவேஷன்ஸ்” என்ற ஜப்பானிய நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறார், மேலும் ஜப்பானில் முதல் சர்வதேச IT பூங்காவை அமைத்துள்ளார். அங்கு ஒரு சில இலங்கை நிறுவனங்கள் ஏற்கனவே செயல்பட்டு வருகின்றன. 

சுருக்கமான காணொளி

முழுமையான காணொளி

 

திரு. நிரஞ்சன் டி சில்வா இலங்கையின் கண்டியில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் கல்வி பயின்றார். தனது முதல் பட்டப்படிப்பினை மின்னணு பொறியியல் துறையில் ஜக்கிய இராச்சியத்திலிருந்து பெற்றுக் கொண்டார். அத்துடன் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் வியாபார பட்டமேற்படிப்பு நிறுவனத்திலிருந்து (PIM) ஒரு MBA பட்டத்தினைப் பெற்றுள்ளார். நிரஞ்சன் இங்கிலாந்தில் பட்டம் பெற்றபின் இலங்கைக்குத் திரும்பினார், ஏனென்றால் “உங்கள் தாய்நிலம் போன்ற வேறு எந்த இடமும் இல்லை” என்று அவர் கூறுகிறார்.

இலங்கைக்குத் திரும்பிய பின்னர், எந்தத் துறையில் நுழைவது என்பது குறித்து தனக்குத் தெரியவில்லை என்று திரு. நிரஞ்சன் டி சில்வா கூறுகிறார். அவர் IT பிரிவில் விருப்பம் கொண்டிருந்தார். ஆனால் அவர் மற்ற தெரிவுகளையும் விரும்பியிருந்தார். நிரஞ்சன்  பல நிறுவனங்களுக்கு விண்ணப்பித்தார். பல சலுகைகளைப் பெற்றார். அவற்றில் சில IT நிறுவனங்களிலிருந்தும் அத்துடன் IT அல்லாத நிறுவனங்களிலிருந்தும் கிடைத்தன. இவர் மெற்றோபொலிட்டன் குழுவில் 1981 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஒரு பொறியியலாளராக இணைந்தார். இந்த நிறுவனம் பின்னர் மெற்றோபொலிட்டன் நிறுவனம் என அழைக்கப்பட்டது.  இந்த நேரத்தில் நிறுவனத்தின் வலிமையானது, அலுவலக உபகரணங்களை விநியோகிப்பதாக இருந்தது. இந்த நிறுவனக் குழுமத்திற்குள் புதிய ஒரு கணினி நிறுவனத்தை அமைக்குமாறு கோரப்பட்டதால், நிரஞ்சன் இந்த நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்தார்.

இந்தக் காலகட்டத்தில் பல கணினிகள் இல்லை – IBM கணினிகள், Wang கணினிகள், NCR மற்றும் Burroughs கணினிகள் இருந்தன. தனிநபர் கணினிகள் காணப்படவில்லை. சில ஆண்டுகளுக்குப் பிறகு சின்க்ளேர் என்ற சிறிய கணினி இருந்தது, இது தனிப்பட்ட கணிப்பொறிக்கான முதல் படியாகும்.

நிரஞ்சன் மெற்றோபொலிட்டனில் சேர்ந்தபோது, வங்கி உபகரணங்களில் ஏகபோக விநியோகஸ்தராக மெட்ரோபொலிட்டன் காணப்பட்டது. அதாவது, லெட்ஜர் அட்டைகள் மற்றும் அச்சுப்பொறிகள். இந்தக் காலகட்டத்தில், ஒரு வாடிக்கையாளரின் கணக்கு விவரங்கள் லெட்ஜர் அட்டையில் பயன்படுத்தப்பட்டன. நிரஞ்சன் இந்தப் பிரிவில் செய்த முன்னேற்றங்களை வலியுறுத்துகிறார். ஏனென்றால் இன்று, ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம், ஒரு வங்கி இலங்கையிலும் சர்வதேச அளவிலும் வாடிக்கையாளரின் கணக்கு விவரங்களை உடனடியாக அணுக முடியும். கிழக்கு ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோபோட்ரான் என்ற இயந்திரம் மெற்றோபொலிட்டனில் இருந்தது. இதற்காக மெற்றோபொலிட்டன் ஒரே விநியோகஸ்தரை வைத்திருந்தது. ஒரே போட்டியாளராக, என்.சி.ஆர். மெக்கானிக்கல் இருந்தது.

1982 ஆம் ஆண்டில், இலங்கை வங்கி ஆனது, சர்வதேச அளவில் வங்கிகள் தன்னியக்கமாக்கலை நோக்கி நகர்கின்றன என்பதையும் லெட்ஜர் அட்டைகளை கைமுறையாகப் பயன்படுத்துவதற்கான எண்ணக்கரு விரைவில் வழக்கற்றுப் போகக்கூடும் என்பதையும் உணர்ந்தது. இந்த திட்டங்களுக்கு தலைமை தாங்கும் மிகவும் திறமையான இரண்டு பேர் இலங்கை வங்கியில் இருந்தனர்; அவர்கள் காலஞ்சென்றவரான கலாநிதி ஆர். வி. ஏக்கநாயக்க மற்றும் திரு. ஜானக்க டி சில்வா ஆகியோராவார். கலாநிதி ஆர். வி. ஏக்கநாயக்க தகவல் தொழினுட்பப் பிரிவின் தலைவராகவும் அத்துடன் திரு. ஜானக்க டி சில்வா BOC இல் கொள்கைத் தலைவராகவும் இருந்தனர். இலங்கை வங்கி இனை உடனடியாக தானியங்கி முறைக்கு மாற்ற முடியாது என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர். இது செய்யப்பட்டால் தொழிற்சங்கங்களிலிருந்து எதிர்ப்பு இருந்திருக்கும். இலங்கை வங்கி தகவல் தொழினுட்பப் பிரிவினை அறிமுகப்படுத்தினால், தொழிற்சங்க உறுப்பினர்கள் தங்களது “மேலதிக நேர கொடுப்பனவுகளை” இழக்க நேரிடும் என்று நினைத்தனர். வங்கி வாடிக்கையாளர்களுக்கு பிற்பகல் 2.00 மணிக்கு மூடப்படும், பின்னர் மாலை 6.00 அல்லது இரவு 7.00 மணி வரை, லெட்ஜர் அட்டைகள் புதுப்பிக்கப்பட்டு ஆவணங்கள் கைமுறையாக மேற்கொள்ளப்பட்டன. இது ஒரு பெரிய பிரச்சினையாக இருந்தது. ஒருபுறம் வங்கியினை தன்னியக்கமாக்கச் செய்ய வேண்டியிருந்தது. மறுபுறம் தொழிற்சங்கங்களிலிருந்து பெரும் எதிர்ப்பு இருந்தது.

ஒரு சமரசமாக, கலாநிதி ஆர்.பி. ஏகநாயக்க மற்றும் திரு. ஜானக்க டி சில்வாவின் திட்டம் பல நிலைகளில் தானியங்கி முறையில் இயங்குவதாக இருந்தது. இதன் விளைவாக, 1983 இன் முற்பகுதியில், இலங்கை வங்கி  ஒரு லெட்ஜர் அட்டை அச்சுப்பொறியுடன் ஒரு கணினியை வழங்குவதற்கான ஒரு வினைமனுக்கோரலை வெளியிட்டது. எல்லா பதிவுகளும் ஒரு கணினியில் இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். ஆனால் IT அறிமுகப்படுத்தப்பட்டாலும், லெட்ஜர் அட்டைகள் இன்னும் பயன்படுத்தப்படும் என்று, தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு உறுதியளிக்க, லெட்ஜர் கார்டு அச்சுப்பொறி மூலம் விவரங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் விரும்பினர்.

மெற்றோபொலிட்டனைப் பிரதிநிதித்துவப்படுத்திய நிறுவனமாக கேனான்(Canon) இருந்தது. எனவே, வங்கிகள் தன்னியக்கமாகத் தொடங்குவதாக, திரு. நிரஞ்சன் டி சில்வாவும் அவரது குழுவும் கேனனுக்குத் தெரிவித்தனர். கேனானிடம் இருந்த ஒரே பொருத்தமான கணினி AS-100 மட்டுமே. கேனான் ஆனது திரு. நிரஞ்சன் டி சில்வாவுக்கு அந்தக் கணினியை வழங்க முடியும் என்று தெரிவித்தது, ஆனால் “லெட்ஜர் அட்டை அச்சுப்பொறி” என்றால் என்ன என்று அவர்களுக்குத் தெரியாது இருந்தது. எனவே, திரு. நிரஞ்சன் டி சில்வா மற்றும் அவரது குழுவினர் ஒரு பிரத்தியேக லெட்ஜர் அட்டை அச்சுப்பொறியை உருவாக்கினர், ஏனெனில் மெட்ரோபொலிட்டன் விலைமனுக்கோரலை இழக்க விரும்பவில்லை. லெட்ஜர் அட்டை அச்சுப்பொறியுடன் ஒரு பெரிய கணினியைக் கொண்டிருந்த பரோஸ் (Burroughs) நிறுவனம் அவர்களின் ஒரே போட்டியாளராகக் காணப்பட்டது.  இறுதியாக, ஒரு புஜித்சூ (Fujitsu) லெட்ஜர் அட்டை அச்சுப்பொறியுடனான ஒரு கேனான் AS-100 கணினியை விலைமனுக்கோரலுக்கு வழங்க மெட்ரோபொலிட்டன் முன்வந்தது.

திரு. நிரஞ்சன் டி சில்வா மற்றும் அவரது குழுவினர் இது குறிப்பாக இலங்கை வங்கிக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு கணினி அமைப்பு என அந்த வங்கிக் குழுவுக்கு தெரிவித்தனர். பின்னர், இலங்கை வங்கி ஒரு செயல் விளக்கத்தினைக் கோரியது. அத்துடன் தயார் செய்வதற்கு ஒரு வார அறிவிப்பை மட்டுமே நிரஞ்சனுக்குக் கொடுத்தது.  இயந்திரங்கள் இலங்கையில் இல்லை. நிரஞ்சனும் ஒரு சகாவும் ஹொங்கொங்கிற்கு சென்றனர். இயந்திரங்களைப் பெற்று ஹொங்கொங்கிலிருந்து இலங்கைக்கு கொண்டு வந்தனர். கலாநிதி ஆர். பி. ஏக்கநாயக்க மற்றும் திரு. ஜானக்க டி சில்வா ஆகியோர் திரு. நிரஞ்சன் டி சில்வாவின் அலுவலகத்திற்கு செயல் விளக்கத்தினைப் பார்வையுற வந்தபோது, அனைத்தும் தயாராக இருந்தன, செயல் விளக்கமும் சீராக நடைபெற்றது. இதன் விளைவாக மெட்ரோபொலிட்டன் அந்த விலைமனுக்கோரலை வென்றது. இது ஒரு ஆரம்பத் திருப்புமுனையாக இருந்தது அத்துடன் மிகவும் சவாலான திட்டமாகும். இது இலங்கை வங்கி மற்றும் பிற வங்கிகளை கணினிமயமாக்குவதற்கான ஆரம்ப கட்டமாக இருந்தது. ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில், இலங்கை வங்கி லெட்ஜர் அட்டை அச்சுப்பொறியை கைவிட்டது. கணினிமயமாக்குவதில் நன்மைகள் இருப்பதை தொழிற்சங்கங்கள் உணர்ந்தன. மேலும் இலங்கை வங்கி முழு தானியங்கி அமைப்புகளுக்கு மாற்றப்பட்டது.

மின்சாரக் கட்டணக் கொடுப்பனவு முறைமை (மின்சார பில்லிங்)

திரு. நிரஞ்சன் டி சில்வா ஆரம்பித்த மற்றொரு சவாலான திட்டம் கட்டணக் கொடுப்பனவுத் திட்டமாகும். இந்த காலகட்டத்தில் இலங்கை மின்சார சபை (CEB) மேற்கொண்ட செயல்முறையின்படி, மின்சார மானி வாசிப்பாளர் நுகர்வோர் வீட்டிற்கு வருகை தந்தார். மானி வாசிப்பைக் கவனித்தார். அவரது அலுவலகத்திற்குச் சென்றார். அதன் பின்னர் கட்டணச்சீட்டு அச்சிடப்பட்டு நுகர்வோருக்கு அனுப்பப்பட்டது. இந்தச் செயன்முறை மிக நீளமாக இருந்தது. சில நேரங்களில் மக்கள் மின்சார பில்கள் பெறப்படவில்லை என்று புகார் கூறினர். பின்னர் லங்கா மின்சார நிறுவனம் (LECO) இந்த செயல்முறையை மாற்ற விரும்பியது. அவர்கள் அறிமுகப்படுத்த விரும்பிய புதிய முறைமையின் படி, மானி வாசிப்பாளர் நுகர்வோர் வீட்டிற்கு வருவார். மானி வாசிப்பைக் குறிப்பிடுவார். முந்தைய வாசிப்புடன் ஒப்பிடுவார். கணக்கிட்டு பில்லை நுகர்வோருக்கு நேராக ஒப்படைப்பார். இந்த திட்டத்திற்கு ஒரு விலைமனு கோரப்பட்டது. மதிப்பீட்டிற்குப் பிறகு, மெட்ரோபொலிட்டன் லெகோவின் “இணையத்துடனான மின்சாரக்கட்டணச்சீட்டிடும் முறைமைக்கான” விலைமனுவை வென்றது. இன்று இலங்கை மின்சார சபை (CEB) மற்றும் LECO இரண்டும் “அந்த இடத்திலேயே (on the spot)” மின்சாரக் கட்டணக் கணக்கீடுகளை மேற்கொள்கின்றன, இதன் மூலம் மானி வாசிப்பு எடுக்கப்படும் நேரத்திலேயே, கட்டணச்சீட்டு நுகர்வோரிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதனால் பணப்புழக்கத்தில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இது நிரஞ்சனும் அவரது குழுவும் மேற்கொண்ட மிகவும் சவாலான திட்டமாக இருந்தது, அத்துடன் இதன் விளைவுகள் இன்றும் நீர்ப் பயன்பாட்டுக் கட்டணச்சீட்டுகள் உட்பட அனைத்து பயன்பாட்டு கட்டணச்சீட்டுகளையும் பொறுத்தவரை தெளிவாகத் தெரிகிறது. திரு. நிரஞ்சன் டி சில்வா இந்த திட்டத்தை செயல்படுத்தும் பணியில் திரு. யாசா கருணாரத்னாவை சந்தித்தார். ஏனெனில் திரு. கருணாரத்ன LECO இன் ஆலோசகராக இருந்தார். அவர்கள் நல்ல நண்பர்களாக மாறினர், இதன் விளைவாக திரு. நிரஞ்சன் டி சில்வாவை இலங்கையின் கணினிச் சமூகத்தில் (CSSL) சேர வேண்டும் என்று திரு. யாசா கருணாரத்ன வலியுறுத்தினார்.

இலங்கை கணினிச் சமூகம் (சிறீலங்கா கம்பியூட்டர் சொசைற்றி (CSSL))

திரு. நிரஞ்சன் டி சில்வா இலங்கை கணினிச் சமூகத்தின் பேரவையில் பணியாற்றினார். மற்றும் பல பதவிகளை வகித்தார். அவர் CSSL இன் செயலாளராக இருந்தார். பின்னர் பொருளாளராக இருந்தார். துணைத் தலைவராக இருந்தார். திரு. லால் சந்திரநாத்துக்குப் பிறகு CSSL இன் தலைவராக இருந்தார். CSSL இல் இணைவதில் நிரஞ்சன் மிகவும் மகிழ்ச்சியடைகிறார். ஏனெனில், அவருக்கு தொழில் வல்லுநர்களுடன் இணைந்து பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த கட்டத்தில், ஒருவரின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் நெட்வொர்க்கிங் இன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்துகிறார். தொழில் ஏணியைத் தானாகவே தொடர முடியாது என்று இளைய தலைமுறையினருக்கு அவர் அறிவுறுத்துகிறார். அதாவது CSSL, ஆஸ்திரேலியன் கம்ப்யூட்டர் சொசைட்டி (ACS) மற்றும் பிரிட்டிஷ் கம்ப்யூட்டர் சொசைட்டி (BCS) போன்ற தொழில்முறை அமைப்புகளுக்குள் இணைப்பினைச் செய்ய வேண்டியது அவசியம் என அறிவுறுத்துகிறார்.

CSSL இன் கீழ் நிரஞ்சன் ஈடுபட்டிருந்த மிகவும் சவாலான பணிகளில் ஒன்று, 1995 இல் தென்கிழக்கு ஆசியப் பிராந்திய கணினிக் கூட்டமைபின் மாநாட்டினை (SEARCC) ஏற்பாடு செய்தது ஆகும். திரு. யாசா கருணாரத்ன மிகச் சிறந்த SEARCC மாநாட்டை ஏற்பாடு செய்ய விரும்பினார். திரு. கருணாரத்னவுக்கு “பெரிய கனவுகள் மற்றும் பெரிய தூரநோக்குகள்” இருந்தன. எப்படியாவது அவர் அவற்றினை அடைந்தார் என திரு. நிரஞ்சன் டி சில்வா கூறுகிறார். CSSL கவுன்சில் கூட்டத்தில் SEARCC இனை நடத்த வேண்டிய வழிமுறைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும், இலங்கையில் இருந்து ஒரு தூதுக்குழு பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது. SEARCC மாநாடு இலங்கையில் நடைபெறுவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு பாகிஸ்தானில் நடைபெற்றது. ஆனால் 1995 ல் கூட, பாகிஸ்தானுக்கு ஒரு குழுவை அழைத்துச் செல்வதற்கு சுமார் ரூபாய் 300,000.00 தேவைப்பட்டது என நிரஞ்சன் கூறுகின்றார். நிரஞ்சன் அப்போது ஒரு புதுமையான யோசனையை முன்வைத்தார்; பாகிஸ்தானுக்கு செல்லும் இலங்கை கணினிச் சமூக உறுப்பினர்களால் இந்த விளம்பரம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். இது முதலில் உறுப்பினர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் பின்னர் நிர்வாக சபை நிரஞ்சனின் திட்டத்திற்கு ஏகமனதாக ஒப்புதல் அளித்தது. கலாநிதி ஆர். பி. ஏக்கநாயக்க, நயனி பெர்னாண்டோ அம்மணியார், திரு. கனிஷ்கா சுகததாச, திரு. யாசா கருணாரத்ன, திரு. பீட்டர் டி அல்மேடா மற்றும் பேராசிரியர் அபயா இந்தூருவா ஆகியோர் பங்கேற்றனர் என்று நிரஞ்சன் நினைவு கூர்ந்தார். அவை அனைத்தும் பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ஜின்னா மைதானத்தில் நிகழ்த்தப்பட்டன. இந்த விளம்பரத் திட்டம் இன்னும் சிறந்த SEARCC விளம்பரத் திட்டங்களில் ஒன்றாக மதிப்பிடப்பட்டுள்ளது. திரு. நிரஞ்சன் டி சில்வாவை இதைச் செய்வதற்கு ஊக்குவித்த நபர் திரு. யாச கருணாரத்ன ஆவார். தான் பெற்ற அனைத்து ஊக்கத்திற்கும் திரு. யாசா கருணாரத்ன மீது ஆழ்ந்த நன்றியுணர்வு உள்ளது என திரு. நிரஞ்சன் டி சில்வா கூறுகிறார்.

நிரஞ்சன் இலங்கை கணினிச் சமூகத்தின் தலைவரான போது ICT இல் மூன்று முக்கிய அமைப்புகள் இருந்தன. தகவல் தொழில்நுட்பத்திற்கான கவுன்சில் (CINTEC) இருந்தது, இது ICT யில் அரசாங்கத்தின் உச்ச கொள்கைகளை உருவாக்கும் அமைப்பாக இருந்தது. இலங்கை கணினிச் சமூகம் தொழில்முறை அமைப்பாக இருந்தது, மேலும் இலங்கை IT கூட்டமைப்பு (FITIS) வர்த்தக நிறுவனமாக இருந்தது. அந்த நேரத்தில் இந்த மூன்று அமைப்புகளும் “பிரிக்கப்பட்டவை”யாகவும் மற்றும் தனித்தனியாக செயல்படுவனவாகவும் இருந்தன. இந்த மூன்று அமைப்புகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால், ஒத்திசைவு காணப்படும். அதன்மூலம் இன்னும் சாதிக்க முடியும் என்பதை திரு. நிரஞ்சன் டி சில்வா உணர்ந்தார். இலங்கை கணினிச் சமூகத்தின் தலைவராக தனது முதல் ஆண்டின் முடிவில், ICT திறன்களை மேம்படுத்துவதற்காக இந்த மூன்று அமைப்புகளும் ஒன்றிணைந்து செயல்பட முடிந்தது என்று அவர் கூறுகிறார்.

தொழில்நுட்பத்தைப் பற்றி திரு. நிரஞ்சன் டி சில்வா கூறுகையில், 1981 ஆம் ஆண்டில் அவர் மெற்றோபொலிட்டனில் சேர்ந்தபோது, தனிநபர் கணினிகள் இல்லை. ஆனால் ஒரு சிறிய சின்க்ளேர் கணினி இருந்தது, அதன் பிறகு ரேடியோ ஷேக் கணினிகள் இருந்தன, அதன்பிறகு மெட்ரோபொலிட்டன் கேனான் கணினிகளை வழங்கியது. கேனான் கணினிகள் சந்தையிலிருந்து வெளியேறும்போது, திரு. நிரஞ்சன் டி சில்வா, மெட்ரோபொலிட்டனின் தலைவர் திரு. ஜே.ஜே. அம்பானியின் ஆதரவுடன் இலங்கைக்கு ACER கணினிகளைப் பெற முடிந்தது. இது சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பாகும். சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, ACER இலங்கையின் முதல் மூன்று தர அடையாளங்களில் ஒன்றாகியது.

திரு. நிரஞ்சன் டி சில்வா, மெற்றோபொலிட்டன் குழுவில் அங்கம் வகித்ததில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறுகிறார். ஏனெனில் இது புதிய தொழில்நுட்பம் மற்றும் புதிய தீர்வுகளில் கவனம் செலுத்திய நிறுவனமாக இருந்தது. இது மிகவும் அவசியமானது, “நீங்கள் இங்கு பெற்றதை, அங்கே நீங்கள் பெற மாட்டீர்கள்!” எனச் சுருக்கமாகக் கூறுகின்றார். இலங்கையை ஒரு சிறந்த இடமாக மாற்றுவதற்கு புதுமைப்படுத்துதல், புதிய மற்றும் சிறந்த வழிகளைச் செய்வது மற்றும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது ஆகியன அவசியம். இலங்கைக்கு நல்ல திறமை இருக்கிறது என்று நிரஞ்சன் கூறுகிறார். நிரஞ்சன் தற்போது “ஆடம் இன்னோவேஷன்ஸ்” என்ற ஜப்பானிய நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறார். மேலும் ஜப்பானில் முதல் சர்வதேச IT பூங்காவை அமைத்துள்ளார். அங்கு ஒரு சில இலங்கை நிறுவனங்கள் ஏற்கனவே செயற்பட்டு வருகின்றன. இறுதியாக, எல்லோரும் அதிக நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். நேர்மறையாக சிந்திக்க வேண்டும். பெரியதாக சிந்திக்க வேண்டும். வேகமாக முன்னேற வேண்டும் என திரு. நிரஞ்சன் டி சில்வா கூறுகிறார்.