திரு.சந்தன வீரசிங்க

திரு. சந்தன வீரசிங்க அவர்கள் DMS எலக்ரோனிக்ஸ் (பிறைவெற்) லிமிடெட் நிறுவனத்தில் பணிப்பாளர்/பொது முகாமையாளராகப் பணியாற்றுகின்றார். இவர் நாலந்தா வித்தியாலயத்தின் பழைய மாணவராவார். சந்தன அவர்கள் மொறட்டுவப் பல்கலைக்கழகத்தில் ஒரு இளநிலைப் பட்டப்படிப்பு மாணவனாக இருந்தபோது, கணினித் தொகுதிகளின் மீதான தனது முதல் ஆர்வத்தினை வெளிக்காட்டினார். அதிலிருந்து மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் பிரிவில் முதல்-வகுப்பு ஹானர்ஸ் பட்டத்தினைப் பெற்றார். இவர் பட்டப்படிப்பின் பின்னர் தரவு நிர்வாக அமைப்புகள் (DMS) நிறுவனத்தில் ஒரு பொறியியலாளராக 1984 இல் இணைந்தார். அதன் பின்னர், DMS அந்நேரத்தில் பயன்படுத்திய வாங் மினி கணினித் தொகுதிகளைக் கையாளுவதில் திரு.சந்தன வீரசிங்க அவர்கள் ஈடுபட்டிருந்தார்.

திரு. சந்தன வீரசிங்க அவர்கள் ஈடுபட்டிருந்த ஒரு முக்கியமான செயற்றிட்டமாக வாங் கணினித் தொகுதிகளில் சிங்கள மற்றும் தமிழ் மொழிகளின் அறிமுகத்தினைக் குறிப்பிடலாம். அந்நேரத்தில் சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் கணினியைப் பயன்படுத்துவது ஒரு தேவையாக இருந்தது. சந்தனவும் அவரது குழுவும் வாங் உலகளாவிய குழுவுடன் இணைந்தனர். இந்தக் குழு வாங் கணினிகளில் ஆங்கிலம் தவிர பிற மொழிகளைச் சேர்ப்பதில் பணிபுரிந்தது. இந்த மேம்பாடு முக்கியமாக சொற் செயலாக்கத்திற்காக இருந்தது. இதன் தொகுப்பு இறுதி செய்யப்பட்டிருந்ததுடன் வெளியீடு செய்யப்படவுமிருந்தது. ஆனால் இது அறிவுசார் சொத்துரிமை தொடர்பான நீதிமன்ற வழக்கால் மோசமாகப் பாதிக்கப்பட்டது. இது தொடர்பில் சுமார் ஒரு வருடம் கழித்து, நீதிமன்றத்தில் தீர்வு காணப்பட்டது. பின்னர் தனிநபர் கணினிகளுக்கான சிங்கள மொழியிலான கணினிச் செய்முறையை DMS உருவாக்கியது. சிங்கள மொழியிலான ஒரு தொகுப்பாக “மௌவிமா” (මව් බිම) மற்றும் தமிழ் மொழியிலான ஒரு தொகுப்பு “தாய்மொழி” இனையும் DMS வெளியிட்டது.

திரு. சந்தன வீரசிங்க அவர்கள் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் ஒரு வருகைதரு விரிவுரையாளராகத் தொடர்ச்சியாகப் பணியாற்றினார். மேலும் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தின் தகவல் தொழினுட்பப் பீடத்தினை உருவாக்கப் பணியாற்றிய குழுவிலும் இவர் இருந்தார். இவர் தகவல் தொழினுட்ப பீடத்தின் வெளிவாரி சபை உறுப்பினராக இருந்தார். திரு. சந்தன வீரசிங்க அவர்கள் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கணினி விஞ்ஞானம் மற்றும் பொறியியல் துறையின் ஒரு வருகைதரு விரிவுரையாளராகவும் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தார்.

திரு. சந்தன வீரசிங்க இலங்கை கணினிச் சங்கத்தின் (CSSL) சிரேஷ்ட உறுப்பினராக உள்ளார். இவர் 1990களின் பிற்பகுதியில் இதில் இணைந்தார். இவர் 2003 ஆம் ஆண்டில் CSSL இன் தலைவராகப் பணியாற்றியுள்ளதுடன், அதன் துணைத்தலைவராக, செயலாளராக மற்றும் மாணவர் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

2003 ஆம் ஆண்டில் இ-இலங்கை மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. மேலும், இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனமும் (ICTA) அமைக்கப்பட்டது. திரு. சந்தன வீரசிங்க CINTEC குழுமத்தின் முன்னாள் அலுவலர் உறுப்பினராக CINTEC இனை மூடும் செயல்பாட்டில் பங்கேற்றார். மேலும் ICTA இனை உருவாக்குவதற்கான கூட்டங்களிலும் பங்கேற்றுள்ளார்.

திரு. சந்தன வீரசிங்க இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் (SLSI) தகவல் தொழில்நுட்பத் துறைசார் உறுப்பினராகவும் இருந்தார். இந்தக் குழு உள்நாட்டு மற்றும் சர்வதேச தரத்திலான தரநிலைகளை உருவாக்குவதில் செயல்பட்டது. திரு. வீரசிங்க தொழில்துறைக்கான தரங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். இறுதியாக, தகவல் தொழினுட்ப அரங்கில் இலங்கை நீண்ட தூரம் வந்துள்ளது என்று திரு. வீரசிங்க கூறுகிறார்.

சுருக்கமான காணொளி

முழுமையான காணொளி


திரு. சந்தன வீரசிங்க அவர்கள் 1979 இலிருந்து 1983 வரை மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் இளமானிப் பட்டப்படிப்பு மாணவனாக இருந்தார். இவர் மொறட்டுவை பல்கலைக்கழகத்திலிருந்து மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்புகள் பொறியியல் பிரிவில் முதலாம்-வகுப்பு ஹானர்ஸ் பட்டத்தினைப் பெற்றுக் கொண்டார். இங்கு தான் கணினி அமைப்புகளின் மீதான ஆர்வம் இவருக்கு உண்டானது. அங்கு ஒரு IBM 1130 கணினி இருந்தது. திரு. சந்தன வீரசிங்க, ஒரு இளமானிப் பட்டதாரியாக ’பஞ்ச்’ அட்டை இயந்திரத்தைப் பயன்படுத்தி ஃபோர்டிரான் நிரலாக்கத்தை மேற்கொண்டார். அதில் அவர் நிரலாக்கத்தினை மேற்கொண்டார் மற்றும் முடிவுகளுக்காக மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்தார். அந்த நேரத்தில் இலங்கையில் கணினிச் செய்முறை ஒரு வளர்ந்து வரும் பகுதியாக இருந்தது, இந்த ஆரம்ப அனுபவமே அவரை கணினிகளில் ஆர்வம் காட்ட வைத்தது.

கணினிச் செயன்முறையில் விசேட பட்டம் பெறுவதற்கான தெரிவு அந்த நேரத்தில் இருந்திருக்கவில்லை, ஆனால் கணினிச் செயல்முறைக்கு மிக நெருக்கமான துறையான மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியற் பிரிவினை சந்தனவால் கண்டுபிடிக்கக்கூடியதாய் இருந்தது. இந்தக் காலப்பகுதியில், மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் கணினி விஞ்ஞானம் மற்றும் பொறியியல் துறையினை ஸ்தாபிக்கும் செயற்பாடுகளில் பேராசிரியர் அபய இந்துருவ அவர்கள் ஈடுபட்டிருந்தார். சந்தன பட்டம் பெற்ற பின்னர், கணினி விஞ்ஞானம் மற்றும் பொறியியல் பீடத்தில் பங்கேற்குமாறு பேராசிரியர் அபய இந்துருவ அவரகள் அழைப்பு விடுத்திருந்தார், ஆனால் சந்தன தொழிற்றுறையில் இணைந்து கொண்டார்.

சந்தன இளங்கலைப் பட்டதாரியாக இருந்தபோது, மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில், தரவு மேலாண்மை அமைப்புகள் (DMS) நிறுவனத்திலிருந்து வருகைதரு விரிவுரையாளர்கள் காணப்பட்டனர்.  அங்கு DMS தமக்கு பொறியியலாளர்கள் தேவையெனும் விளம்பரத்தை வெளியிட்டிருந்தது.  திரு. சந்தன வீரசிங்க அதற்கு விண்ணப்பித்தார். அத்துடன் 1984 இல் ஒரு பொறியியலாளராக DMS இல் இணைந்தார். அதன் பின்னர், DMS அந்நேரத்தில் பயன்படுத்திய வாங் மினி கணினி தொகுதிகளைக் கையாளுவதில் திரு.சந்தன வீரசிங்க அவர்கள் ஈடுபட்டிருந்தார். பின்னர் வாங் கணினியானது PC கணினி எல்லையுடன் வெளியாகியது. இந்த நேரத்தில், IBM கூட, PC கணினி எல்லையுடன் வெளியாகியது. IBM முதன்முதலில் தங்கள் PC வரம்பை இலங்கை கணினிச் சங்கத்தின் (CSSL) கண்காட்சியில் 1984 இல் காட்சிப்படுத்தியது.

உள்நாட்டு மொழிகளில் ICT

திரு. சந்தன வீரசிங்க அவர்கள் ஈடுபட்டிருந்த ஒரு முக்கியமான செயற்திட்டமாக, வாங் கணினித் தொகுதிகளுக்கு சிங்கள மற்றும் தமிழ் மொழிகளின் அறிமுகத்தினைக் குறிப்பிடலாம். அந்நேரத்தில் தொழில்துறைகளிலிருந்து உள்நாட்டு மொழிகளில் கணினியைப் பயன்படுத்துவது ஒரு தேவையாக இருந்தது, அத்துடன் ஆங்கில மொழியில் மட்டும் ஏன் கணினிச் செயல்முறை சாத்தியமாகின்றது என பயனர்கள் வினவ ஆரம்பித்தனர். அரசுத் துறை மற்றும் பொதுமக்களின் பரந்த பகுதியினர், கணினிகளை மேலும் அணுகுவதற்கு உள்ளூர் மொழி கணினிச் செயல்முறையானது சாத்தியமாக வேண்டிய அவசரத்தேவை இருந்தது. இதன் விளைவாக, சந்தனவும் அவரது குழுவும் இந்தப் பிரச்சினையைத் தீர்த்து, வெளிப்புற எழுத்துருக்களை வாங் PC யில் அறிமுகப்படுத்த முடியும் என்பதைக் கண்டறிந்தனர். சந்தனவும் அவரது குழுவும் பின்னர் வாங் PC யில் எழுத்துரு நினைவகத்தை அணுகுவதில் பணிபுரிந்தனர். அத்துடன், ஆங்கிலத்தைத் தவிர வேறு மொழிகளை நினைவகத்தில் வைக்கக்கூடிய எழுத்துருக்களை மாற்றத் தொடங்கினர்.

சந்தனவும் அவரது குழுவும் முதன்மை நிறுவனமான வாங் (Wang) உடன் தொடர்பில் இருந்தனர். மேலும், Wang அமைப்புகளில் பல்வேறு மொழிகளை அறிமுகப்படுத்துவதற்கான உலகளாவிய முயற்சியையும் Wang ஆரம்பித்துள்ளது என்பதை அவர்கள் உணர்ந்தனர். Wang ஏற்கனவே “தாய் (Thai)” மொழி போன்ற பல ஆசிய மொழிகளை அதன் கணினிகளில் சாத்தியமாக்கியிருந்தது.  ஆகவே, உள்நாட்டுக் குழுவானது உலகளாவிய குழுவுடன் இணைக்கப்பட்டது அத்துடன் திரு. சந்தன வீரசிங்க மற்றும் அவரது குழு திரு. பீற்றர் ஜோர்டனுடன் இணைந்து பணியாற்றியது.

சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளைப் பயன்படுத்துவதில் ஏற்பட்ட சில சிக்கல்கள் என்னவென்றால், இந்த இரண்டு மொழிகளின் உரைகள் லத்தீன் எழுத்துக்களைப் போலல்லாமல் பல-நிலைகளாக இருக்கின்றன; ஒரு உயர் நிலை, நடுத்தர நிலை மற்றும் கீழ்-நிலை (பில்லி) காணப்படுகின்றது. கணினிகளில் இந்த எழுத்துக்களைச் சேர்ப்பது சவாலானது.

மேலும் கணினிகளில் எழுத்துக்களின் உள் பிரதிநிதித்துவமானது ஒரு பிரச்சினையாகக் காணப்பட்டது. ஒற்றை பைட் சேமிப்பிடத்தைக் கொண்ட ASCII தரநிலையுடன் காணப்படுகின்ற 255 எழுத்துக்களை விட சிங்கள எழுத்துக்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது. சிங்கள மற்றும் தமிழ் எழுத்துக்களை 3-நிலை வடிவத்தில் திரையில் காண்பிக்க வேண்டியிருந்தது. பின்னர் ஒரு விசைப்பலகை மூலம் எழுத்துக்களை உள்ளிடுவதில் சிக்கலை அவர்கள் எதிர்கொண்டனர். திரு. சந்தன வீரசிங்க மற்றும் குழுவினர் இந்த திட்டத்தில் Wang உடன் இணைந்து பணியாற்றினர் மற்றும் Wang “பாலிகிளாட் எடிட்டர்” என்று அழைத்ததற்கிணங்க சிங்களத்தை ஏற்றுக்கொண்டனர். இந்த மேம்பாடு பிரதானமாக சொற் செயலாக்கிக்காக காணப்பட்டது.

ஆரம்பத்தில் சந்தன மற்றும் குழுவினரால் இலங்கையிலும் அத்துடன் அமெரிக்கா மற்றும் பிரஸ்ஸல்ஸில் Wang அணிகளும் பாரிய அளவிலான பணிகளை முன்னெடுத்தன. இந்த மேம்பாட்டின் இறுதிக் கட்டங்களுக்கு, தொகுப்பை இறுதி செய்வதற்காக சந்தன அமெரிக்காவின் Wang ஆய்வகங்களையும் பிரஸ்ஸல்ஸில் உள்ள மேம்பாட்டு மையத்தையும் பார்வையிட்டார். Wang தொகுப்பானது 1985 இன் இறுதியில் வெளியிடப்பட்டது. ஆனால் வெளியீடானது ஒரு நீதிமன்ற வழக்கால் மோசமாக பாதிக்கப்பட்டது; மெட்ரோபொலிட்டன் லிமிடெட் நிறுவனத்தினால் தாக்கல் செய்த ஒரு காப்புரிமையை DMS மீறுவதாகக் கூறி திரு. ஏ.கே.  குமாரசேனா அவர்கள் நீதிமன்ற வழக்கைத் தொடங்கினார். இந்த வழக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் கிட்டத்தட்ட ஒரு வருடம் விசாரணைக்கு இருந்தது. சுமார் ஒரு வருடம் கழித்து, இரு தரப்பினரும் ஒருமித்து நீதிமன்றத் தீர்வுக்கு வந்தனர், அத்துடன் வழக்கு நிறுத்தப்பட்டது.

தொடர்ச்சியாக, தனிநபர் கணினிகளுக்கான சிங்கள மொழியிலான கணினி செய்முறையினை DMS உருவாக்கியது. சிங்கள மொழியிலான ஒரு தொகுப்பு “மௌவிமா” (මව් බිම) மற்றும் தமிழ் மொழியிலான ஒரு தொகுப்பு “தாய்மொழி” இனையும் DMS வெளியிட்டது.  இது தொழில்துறை – தரநிலை தனிநபர் கணினிகளில் சிங்கள மற்றும் தமிழ் மொழிகளை உள்ளிடுவதற்குச் சாத்தியமாக்கியது. இவை மென்பொருள் மற்றும் வன்பொருளின் ஒரு சேர்க்கையாகும். DMS வன்பொருள் கூறுகளை உள்ளடக்கியிருந்தது, இதனால் அறிவுசார் சொத்துரிமைப் பாதுகாப்பு அங்கு இருந்தது. இந்தத் தொகுப்பு 1980 களின் பிற்பகுதியில் வணிக ரீதியாக விற்பனை செய்யப்பட்டது, மேலும் இது பல சட்ட நிறுவனங்கள், வழக்கறிஞர்கள் போன்றவர்களால் வாங்கப்பட்டது. இதே நேரத்தில் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் கணினி தொழினுட்ப நிறுவகம் போன்ற பிற நிறுவனங்களால், சிங்கள மொழியிலான கணினிச் செயல்முறைக்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டன. உள்ளூர் மொழிகளில் கணினிச் செயல்முறைகளுக்கான பல வணிகத் தொகுப்புகள் அந்த நேரத்தில் கிடைத்தன.

திரு. சந்தன வீரசிங்க தொழிற்துறையில் பணியாற்ற விரும்பினாலும், அவர் தொடர்ந்து கல்விப் பணிகளிலும் ஈடுபட்டார். இவர் மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் வருகைதரு விரிவுரையாளராக இருந்தார். மேலும் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தின் தகவல் தொழினுட்பப் பீடத்தினை உருவாக்கப் பணியாற்றிய குழுவிலும் இவர் இருந்தார். இவர் தகவல் தொழினுட்ப பீடத்தின் வெளிவாரி  சபை உறுப்பினராக இருந்தார். இந்த பீடம் தனித்துவமானது, ஏனெனில் இது இலங்கையில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் முதல் தகவல் தொழில்நுட்ப பீடமாக இருந்தது, மேலும் இது விஞ்ஞானத் துறைகளில் இருந்து மட்டுமல்லாமல் கலை மற்றும் பிற துறைகளிலிருந்தும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களை தொழில்துறையிலுள்ள தேவைக்கு ஏற்ப உள்ளீர்ப்பதிலுள்ள பிரச்சினையை எடுத்துரைத்தது. திரு. வீரசிங்க அவர்கள் மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் கணினி விஞ்ஞானம் மற்றும் பொறியியல் துறையின் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டார். ஒரு வருகைதரு விரிவுரையாளராக, ஆரம்பத்தில் தொழில்நுட்பப் பாடங்களிலும், ஆனால் தற்போதுவரை நிபுணத்துவப் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றார்.

இலங்கை கணினிச் சங்கம் (CSSL)

திரு. சந்தான வீரசிங்க அவர்கள் CSSL இன் ஒரு உறுப்பினராக 1990 களின் பிற்பகுதியில் இணைந்தார். இது CSSL தலைவராக திரு. லால் சந்திரநாத் பொறுப்பேற்றபோது நிகழ்ந்தது. திரு. வீரசிங்க கவுன்சிலில் பணியாற்றவும் மாணவர் ஆலோசகரின் பொறுப்பை ஏற்கவும் அழைக்கப்பட்டார். அவர் மாணவர் ஆலோசகராக ஆஸ்திரேலிய கணினிச் சங்கத் (ACS) தேர்வுகள் தொடர்பான பணிகளில் ஈடுபட்டார். இது இலங்கையில் சர்வதேச அளவில் பல ICT கற்கைகள் இல்லாத காலகட்டம். எனவே, இந்த இடைவெளியை ACS மற்றும் BCS போன்ற கற்கைகள் பூர்த்தி செய்தன.

இரு வருடங்கள் மாணவ ஆலோசகராகப் பணியாற்றிய பின்னர், CSSL இன் செயலாளராக திரு. வீரசிங்க அவர்கள் நியமிக்கப்பட்டார். அந்நேரத்தில் திரு. நிரஞ்சன் டீ சில்வா CSSL இன் தலைவராக இருந்தார். அதன்பிறகு திரு. சந்தன வீரசிங்க அவர்கள் CSSL துணைத் தலைவராகவும், 2003 இல் CSSL தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

இலங்கையில் தகவல் தொடர்பாடல் தொழினுட்ப வளர்ச்சியின் வரலாற்றில் இது ஒரு முக்கியமான காலகட்டம். ஏனென்றால் இ-இலங்கை மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டு, இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்ப தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) அமைக்கப்பட்ட காலம் இது. ICTA ஸ்தாபிக்கப்பட்டபோது, தகவல் தொடர்பாடல் தொழினுட்பத்தில் அரச உயர் தீர்மானங்களை மேற்கொள்ளும் முன்னைய கட்டமைப்பாகவிருந்த தகவல் தொழினுட்பப் பேரவை (CINTEC) ஆனது மூடப்பட்டது. திரு. சந்தன வீரசிங்க CINTEC குழுமத்தின் முன்னாள் அலுவலர் உறுப்பினராக CINTEC இனை மூடும் செயல்பாட்டில் பங்கேற்றார். மேலும் ICTA இனை உருவாக்குவதற்கான கூட்டங்களிலும் பங்கேற்றுள்ளார்.

அந்த ஆண்டின் தேசிய ICT மாநாட்டின் தொனிப்பொருளாக “இ-இலங்கை; பார்வை முதல் உண்மை வரை” ஆனது காணப்பட்டது. CSSL மாநாடுகளை மிகவும் மாறுபட்டதாக மாற்றுவதற்கும் பங்கேற்பாளர்களுக்கு அதிக மதிப்பைக் கொடுப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 2003 ஆம் ஆண்டில் CSSL மாநாட்டிற்கான ஒரு முறையான தொடக்க விழா ஒரு அங்குரார்ப்பண வைபவத்துடன் நடைபெற்றது.

திரு. சந்தன வீரசிங்க அவர்கள் தரநிலைப்படுத்தல் பிரிவிலும் பணியாற்றினார்; இவர் இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் (SLSI) தகவல் தொழினுட்பத் துறைசார் பிரிவின் ஒரு உறுப்பினராக இருந்தார். இந்தக் குழு ICTA இனால் உருவாக்கப்பட்ட உள்ளூர் மொழிகள் மற்றும் ICT மீதான தரநிலைகள் போன்ற உள்வாரி தரநிலைகளை உருவாக்கியதுடன் மட்டுமல்லாது, சர்வதேச தரநிலைகளையும் எடுத்துரைத்தது. கொடுப்பனவு செலுத்துதல் தொடர்பான தரநிலைகள் போன்ற வங்கித் துறை தொடர்பான தரங்களுக்கும் இந்த குழு பாராட்டத்தக்க பணிகளை மேற்கொண்டதாகவும் அவர் கூறுகிறார். திரு. வீரசிங்க தொழில்துறைக்கான தரங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார்.

தகவல் தொழினுட்ப அரங்கில் இலங்கை நீண்ட தூரம் வந்துள்ளது என்று திரு. வீரசிங்க கூறுகிறார். முதலாம் தலைமுறை இயங்குதளங்கள், மினிகம்ப்யூட்டர்கள் மற்றும் மெயின்பிரேம் கணினிகளிலிருந்து தனிப்பட்ட கணினிகள் மற்றும் தனிப்பட்ட கணினிகளுக்கான வலையமைப்புகளிற்கு தொழினுட்ப நகர்வு ஏற்பட்டுள்ளது. அத்துடன் தற்போது கிளவுட் மற்றும் பிக் டேட்டா போன்றவற்றிற்கு தொழினுட்ப நகர்வு உள்ளது என்று அவர் கூறுகிறார். இந்தத் தொழிற்துறை பெருமளவில் விரிவடைந்துள்ளதாகவும், இப்போது பலர் ICT அரங்கில் நுழைய முடிகிறது என்றும் அவர் கூறுகிறார். ICT கல்விக்கான வாய்ப்புகளும் விரிவடைந்துள்ளன, கடந்த 30 ஆண்டுகளில் இலங்கை ICT யில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது என்று அவர் கூறுகிறார். மற்றைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கைக்கு இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது, மேலும் தொழில்துறையை மேலும் விரிவுபடுத்த வேண்டிய அவசியமுள்ளது என்று திரு.வீரசிங்க கூறுகிறார். ஆனால் SLASSCOM ஸ்டார்ட்-அப்களை உருவாக்குவது போன்ற நல்ல முயற்சிகள் உள்ளன. மேலும் கல்விப்பிரிவில் மொறட்டுவை பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்கள் வேலை தேடுபவர்களை உருவாக்குவதிலிருந்து வேலை-படைப்பாளர்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துகின்றன. ICT துறையில் இது சரியான பாதை என்றும், பல தொழில்களுடன் ஒப்பிடும்போது குறைந்தபட்ச மூலதனத்துடன் புதிய நிறுவனங்களை அமைக்க முடியும் என்று அவர் குறிப்பிடுகிறார்.