கலாநிதி கவன் ரட்ணதுங்க

   

கலாநிதி கவன் ரட்ணதுங்க அவர்கள் கொழும்பு, ரோயல் கல்லூரியில் கல்வி பயின்றுள்ளதுடன் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பௌதீகவியல் துறையில் விஞ்ஞான இளமானிப் பட்டத்தினை (முதல் வகுப்பு கொனர்ஸ் பட்டம்) 1976 ஆம் ஆண்டில் பெற்றுள்ளார். இவர் அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் வானியல் துறையில் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார், அங்கு அவர் வானியலில் விஞ்ஞான முதுமானிப் பட்டத்தினை முடித்தார். அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெறுவதற்குப் படித்தார். அதன்பிறகு, கலாநிதி கவன் மீண்டும் அமெரிக்கா சென்றார். 1984 ஆம் ஆண்டில் பிரின்ஸ்டனில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்ட் ஸ்டடி என்ற இடத்தில், அவருக்கு முதலில் ஒரு மின்னஞ்சல் முகவரி இருந்தது. கலாநிதி கவன் அவர்கள் பிரின்ஸ்டனில் இருந்து கனடாவில் உள்ள டொமினியன் வானியற்பியல் ஆய்வகத்திற்கும், பின்னர் 1989 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள நாசா கோடார்ட் விண்வெளி விமான மையத்திற்கும் சென்றார்.

 

சுருக்கமான காணொளி

முழுமையான காணொளி


1980களின் பிற்பகுதியில், அமெரிக்காவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் உள்ள இலங்கையர்கள் ஒருவருக்கொருவர் மின்னஞ்சலைப் பயன்படுத்தித் தகவல்களைப் பரிமாறிக் கொண்டிருந்தனர். இந்தக் குழு வளர்ந்து கொண்டே இருந்தது. அத்துடன் அதற்கு SLNET –சிறீலங்கா நெட்வேர்க் எனப் பெயரிடப்பட்டது. இலங்கையில், இந்தக் காலகட்டத்தில், ஜேவிபி கிளர்ச்சி பரவலாக இருந்தது, கலாநிதி கவன் மற்றும் பலர் இலங்கையிலிருந்து செய்திகளைப் பெற ஆர்வமாக இருந்தனர். ஆனால் அவர்கள் செய்திகளைப் பெறுவதற்கான ஒரே வழி இலங்கைக்கான நீண்ட தூரத் தொலைபேசி அழைப்புகளாகவே இருந்தது, அவை மிகவும் விலை உயர்ந்தவையாக இருந்தன. பின்னர், கலாநிதி நிமல் ரத்நாயக்க தனது குறுகிய அலை வானொலியைப் பயன்படுத்தி பிபிசியில் செய்திகளைக் கேட்கத் தொடங்கினார், செய்திகளை ஒலிபெயர்த்து அஞ்சல் பட்டியலில் இடுகையிடத் தொடங்கினார். இது 1000 க்கும் மேற்பட்ட மின்னஞ்சல் முகவரிகளை இணைத்துக் கொண்டு வேகமாக வளர்ந்தது. மக்கள் இலங்கையிலிருந்து வரும் செய்திகளுக்காக தொலைபேசியில் தொடர்பு கொண்டதுடன் அச் செய்திகளைப் பட்டியலில் பதிவிட்டனர். கலாநிதி கவன் அவர்கள் இந்த நேரத்தில் இணையச் சேவை வழங்குநரான கம்ப்யூசர்வ் பற்றி கண்டுபிடித்தார், இது வயர் செய்தி அறிக்கைகளை வழங்கியது. மேலும் இதன் மூலம் “இலங்கை” போன்ற முக்கிய வார்த்தைகளுடன் அதைத் தேடவும் தொடர்புடைய கதைகளைக் கண்டறியவும் முடிந்தது. பிபிசி போன்ற ஒற்றை அமைப்பு மூலம் கிடைத்ததை விட அதிகமான உள்ளடக்கம் அதில் காணப்பட்டது. கலாநிதி கவன் அவர்கள் இந்த உள்ளடக்கத்தை நகலெடுத்து SLNET பட்டியலில் இடுகையிடத் தொடங்கினார், அதில் அவர் 1989 இல் இணைந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் பட்டியல் பெரிதாகி, இலங்கையின் ஒரு பெரிய சமூகத்திற்கு தினமும் வயர் அறிக்கைகள் வெளியிடப்பட்டன. கலாநிதி கவன் அவர்கள் நாசா கோடார்ட் விண்வெளி விமான மையத்தில் இருந்தபோது தினமும் இதனை மேற்கொண்டார். பின்னர், 1990 ஆம் ஆண்டில், கலாநிதி கிஹான் டயஸ் அவர்கள் லங்கா அகாடமிக் நெட்வொர்க் (LAcNET) என்ற தன்னார்வ, இலாப நோக்கற்ற அமைப்பை நிறுவினார். லாக்நெட் (LAcNET) ஆனது தொடர்ச்சியாகப் பலரால் நடாத்தப்பட்டது. இது கடந்த பல ஆண்டு காலமாக கலாநிதி சஞ்சீவ வீரவர்ண அவர்களால் நடாத்தப்பட்டது. கலாநிதி கவன் அவர்களால் கம்ப்யூசர்வ் அணுகப்பட்ட முறை, செய்திகளைப் பெறுதல் மற்றும் இடுகையிடும் முறைகளைத் தானியக்கமாக்க முடிந்தது. அதன்பின்னர், கலாநிதி வீரவர்ண அவர்கள் செய்திகளை வடிகட்டக்கூடிய ஒரு புரோகிராமினை எழுதினார். அதனால் செய்திகள் நகல் எடுக்கப்படவில்லை.

இணையச் சூழ்நிலையில் இலங்கைக்கு ஒரு முன்னணி ஆரம்பம் இருந்தது என்பதைக் கலாநிதி கவன் நினைவுபடுத்துகிறார். Soc.culture.srilanka போன்ற யூஸ்நெட் குழுக்கள் soc.culture.india உருவாக்கப்படுவதற்கு முன்பே உருவாக்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.

இணையத்துடன் இணைத்தல்…

பேராசிரியர் அபய இந்துருவ அவர்கள் லங்கா எடுயுகேஷனல் அகடெமிக் அன்ட் ரிசேச் நெட்வேர்க் (LEARN) இனை உருவாக்கிய பின்னர், இலங்கையில் உள்ள எந்தவொரு நிறுவனத்தினாலும் டயல்-அப் கற்றல் மற்றும் மின்னஞ்சலைப் பெற முடிந்தது. 1991 ஆம் ஆண்டில், கலாநிதி கவன் ஓய்வினை விடுப்பில் அடிப்படை ஆய்வுகள் நிறுவனத்தில் (ஐ.எஃப்.எஸ்) இணைந்தார். அதன் பின்னர் அவர் செய்த முதல் காரியம், LEARN உடன் ஒரு இணைப்பை உருவாக்கியதாகும். இதன் மூலம் அவர் டயல்-அப் செய்து தனது மின்னஞ்சலை IFS இல் அணுக முடியும். இதற்கு ஐ.எஃப்.எஸ்ஸில் எதிர்ப்புக் காணப்பட்டது. இது பல்வேறு வழிகளில் வெளிப்பட்டது. இப்போது எங்கும் பரவியுள்ள மின்னஞ்சல்கள் 1990 களின் முற்பகுதியில் அவ்வளவு பிரபலமடையவில்லை என்று அவர் கூறுகிறார். இந்த காலகட்டத்தில், இணையம் தான் எதிர்காலம் என்பது இலங்கையில் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை. 1995 ஆம் ஆண்டில், இலங்கையில் முதல் இணைய நிறுவனமான, லங்கா இன்டர்நெட் உருவாக்கப்பட்டது. LEARN இற்கு நிரந்தர இணைய இணைப்பும் நிறுவப்பட்டது. டெய்லி நியூஸ் மற்றும் சிலோன் லிமிடெட் அசோசியேட்டட் செய்தித்தாள்களின் சண்டே அப்சர்வர் செய்தித்தாள்கள் இணையத்தில் கிடைத்தன. தனியார் செய்தித்தாள்களும் இணையத்தில் இருக்க வேண்டியிருந்தது. எனவே, சண்டே டைம்ஸை இணையத்தில் இருக்க லாக்நெட் (LAcNET) நிதியளித்தது. கலாநிதி கிஹான் டயஸ் இணையத்தில் சண்டே டைம்ஸின் வாராந்தப் பதிப்பை உருவாக்கினார். அவர் இதனை 1996 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கி சுமார் 2/3 ஆண்டுகள் தொடர்ந்தார்.

காப்பகப்படுத்தல்

கலாநிதி கவன் பல ஆண்டுகளாக சண்டே டைம்ஸைத் தொகுத்து வழங்கினார். மேலும் 1996 ஆம் ஆண்டு முதல் சண்டே டைம்ஸின் முழுமையான காப்பகம் இருப்பதற்கான காரணம் இது என்று அவர் கூறுகிறார். லங்கா இன்டர்நெட் மூடப்பட்டபோது, சண்டே அப்சர்வர் மற்றும் டெய்லி நியூஸின் ஏழு ஆண்டுக் காப்பகங்கள் இழக்கப்பட்டன. இதன் மூலம் வலைத்தளங்கள் காப்பகப்படுத்தப்பட வேண்டும் என்ற உண்மை சுட்டிக்காட்டப்படுகிறது என்று கலாநிதி கவன் வலியுறுத்துகிறார். இணையத்திலுள்ள உள்ளடக்கங்களைக் காப்பகப்படுத்துவதற்கு இலங்கையில் எந்தவொரு சட்டமும் ஒழுங்குமுறையும் இல்லை என்ற உண்மையை அவர் வலியுறுத்துகிறார். இணையத்தில் அச்சிடுவதற்கான சட்டம் காகிதத்தில் அச்சிடுவதற்கான சட்டத்திலிருந்து வேறுபட்டதாக இருக்கக்கூடாது. இலங்கையின் அச்சகங்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ், இலங்கையில் வெளியிடப்பட்ட ஒவ்வொரு புத்தகத்தின் (மற்றும் அடுத்தடுத்த பதிப்புகள்) ஐந்து பிரதிகள் தேசிய காப்பகத் துறைக்கு அனுப்பப்பட வேண்டும். இலங்கையில் வெளியிடப்பட்ட புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்களைப் பதிவு செய்வதற்குத் திணைக்களம் பொறுப்பாகும். இணைய உள்ளடக்கத்தைக் காப்பகப்படுத்த திணைக்களத்திற்கு நிதி பெறுவதற்கு ஒரு வழி இருந்தால், அது உதவும். இணையத்தில் உள்ள உள்ளடக்கம், குறைந்தபட்சம் எல்.கே டொமைனின்(LK domain ) கீழ் உள்ளவையாவது, முறையாகக் காப்பகப்படுத்தப்பட வேண்டும், இதனால் எதிர்காலத்தில் ஆராய்ச்சியாளர்கள் அந்தக் காப்பகங்களை அணுக முடியும். ஒரு குறிப்பிட்ட அளவு காப்பகம், அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட archive.org ஆல் மேற்கொள்ளப்படுகிறது, ஆனால் அது முழுமையடையாது என்று கலாநிதி கவன் கூறுகிறார். எல்.கே டொமைனின் கீழ் உள்ளடக்கத்தைக் காப்பகப்படுத்த ஒரு வழிமுறை அமைக்கப்பட வேண்டும். இதனைச் செயல்படுத்த பேராசிரியர் கிஹான் டயஸ் பெரிதும் ஆர்வம் காட்டுகிறார் என்று அவர் கூறுகிறார். ஆனால் பொருத்தமான மென்பொருளும் அதை இயக்க ஒரு நபரும் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.

இலங்கை பற்றிய தகவல், lakdiva.org

1998 ஆம் ஆண்டில், இலங்கை பற்றிய கூடுதல் தகவல்கள் இணையத்தில் இருக்க வேண்டும் என கலாநிதி கவன் முடிவு செய்தார். ஆகையால், 14 வயதாக இருந்த அவரது மகன் ராஜீவ் உதவியுடன், ஒப்டிகல் கேரக்டர் ரெக்னிகேஷன் (OCR) இனைப் பயன்படுத்தி “இலங்கையின் ஒரு குறுகிய வரலாறு H.W. கோட்ரிங்டன் ” இனை ஸ்கேன் செய்து உரைப்பகுதியாக மாற்றியதுடன் அதனை இணையத்தில் பதிவேற்றினார். இது இலங்கையின் வரலாறு குறித்த 50,000 சொற்களின் புத்தகம் இணையத்தில் கிடைத்த முதல் சந்தர்ப்பமாகும். அதைத் தொடர்ந்து, ராஜீவ் மகாவம்சத்தையும் பதிவேற்றினார்.

 பின்னர் கலாநிதி கவன், இலங்கையின் நாணயங்கள் மற்றும் நாணயத் தாள்கள் குறித்த வலைத்தளத்தை உருவாக்கினார். இந்த வலைத்தளங்கள் வரலாற்றின் புத்தகங்களுடன் தளங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன, எனவே குறுக்கு-இணைப்புகளாக உள்ளன. கலாநிதி கவன் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் உள்ளடக்கத்தைப் பதிவேற்றியுள்ளார்.

கலாநிதி கவனின் தளத்தின் டொமைன் ஆனது lakdiva.org ஆகும். மேலும், அவர் lakdiva.lk இனையும் பதிவு செய்துள்ளார், ஆனால் இன்னும் அதனை முறைப்படுத்தவில்லை அத்துடன் டொமைனை அதே தளத்திற்கு வழிப்படுத்தவில்லை. Coins.lakdiva.org என்ற வலைத்தளமானது கி.மு. 300 முதல் இன்று வரை இலங்கையிலிருந்த நாணயங்களின் வரலாறு குறித்த தகவல்களைக் கொண்டுள்ளது – அதாவது இலங்கையிலிருந்த நாணயங்களின் 2300 ஆண்டுகால வரலாற்றினை இதில் உள்ளடக்கியுள்ளது. Notes.lakdiva.org என்ற வலைத்தளம் 1785 முதல் இலங்கையிலிருந்த நாணயத்தாள்கள் பற்றிய தகவல்களைக் கொண்டுள்ளது. பழைய குறிப்புகள், பட்டியல்களிலிருந்து (catalogs) வந்தவை என்று அவர் கூறுகிறார். மேலும், கலாநிதி கவனின் தந்தை சேகரித்த 1500 களில் இருந்தான இலங்கையின் வரைபடங்களை உள்ளடக்கிய map.lakdiva.org என்ற வலைத்தளமும் உள்ளது.