திரு.பாலச்சந்திரன் ஞானசேகரையர்

திரு. பாலச்சந்திரன் ஞானசேகரையர் ICT அரங்கில், உள்ளூர் மொழிகளில் முக்கிய மேம்பாடுகளைப் பொறுப்பேற்றுள்ளார். இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடற் தொழினுட்ப நிறுவனத்தின் (ICTA) ஓர் ஆலோசகராக, 2006 ஆம் ஆண்டில் தரநிலைப்படுத்தப்பட வேண்டிய ஒரு தமிழ் விசைப்பலகைத் தளவமைப்பில் பணியாற்றத் தொடங்கினார். பின்னர் அவர் தமிழ் ICT தரநிலையின் வரைவினை உருவாக்குவதில் பணியாற்றினார். அது தமிழ் விசைப்பலகை தளவமைப்பில் ’கீயிங்-இன்’ தொடர்வரிசைகளை உள்ளடக்கியதுடன், யுனிகோட் தரத்துடன் இணைக்கப்பட்ட தமிழ் எழுத்துக்களுக்கான குறியாக்கம் மற்றும் தமிழிற்கான ஓர் அடுக்கு வரிசை ஆகியவற்றையும் உள்ளடக்கியது. இலங்கை தரநிர்ணய நிறுவனத்திற்கு ICTA முன்மொழிந்த வரைவுத் தரநிலையில் இவை சேர்க்கப்பட்டன. இதன் விளைவாக தமிழ்த் தகவல் தொடர்பாடற் தொழில்நுட்ப தரநிலை SLS 1326: 2008 உருவானது.

திரு. பாலச்சந்திரன் பின்னர் இணையப் பாதுகாப்பு பகுதிக்கு தம்மை மாற்றிக் கொண்டார். அவர் ஒரு சான்றளிக்கப்பட்ட நெறிமுறை ஊடுருவல் விற்பன்னராகவும் மற்றும் சான்றளிக்கப்பட்ட கணினி ஊடுருவல் தடயவியல் ஆய்வாளராகவும் இருக்கின்றார். திரு. பாலச்சந்திரன் CSIRT வங்கியின் முதல் ஊழியராவார். அவர் தற்போது டயலொக் ஆக்சியாடாவில் (Dialog Axiata) சைபர் பாதுகாப்புத் தலைவராக உள்ளார்.

திரு.பாலசந்திரனுக்கு அவுஸ்திரேலியாவின் சார்லஸ் ஸ்டர்ட் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப இளங்கலை (ஹானர்ஸ்) பட்டம் வழங்கப்பட்டது. இவரின் ICT மற்றும் தமிழ் மொழி மீதான ஆர்வம் காரணமாக, அவரது முதுகலைப் பட்டமானது ICT மற்றும் மொழி இரண்டின் கூறுகளையும் உள்ளடக்கியது. அவரது பட்டத்திற்கான ஆராய்ச்சியானது சிங்கள மொழியில் உள்ள பெயர்களுக்கு தமிழ்ப் பெயர்களை மொழிபெயர்ப்பதாகும்.

சுருக்கமான காணொளி

முழுமையான காணொளி

திரு. பாலச்சந்திரன் ஞானசேகரையருக்கு ICT இன் மீதான ஆர்வம் அவர் சிறுவனாக இருந்தபோதே தொடங்கியது. அவரது பெற்றோர் இருவரும் எழுத்தாளர்கள். அவரது தந்தை, 1990 களின் பிற்பகுதியில் தமிழில் புத்தகங்களை எழுத ஒரு கணினியைப் பயன்படுத்தினார். அவர் தமிழில் தட்டச்சு செய்து புத்தகங்களை வெளியிட்டார். இதன் விளைவாக, ஒரு பாடசாலை மாணவனாக இருந்தபோதும், திரு.

பாலச்சந்திரன் (பாலா) தமிழ் எழுத்துக்கள் ஒரு கணினியில் எவ்வாறு செருகப்படுகின்றன என்பதை அறிந்து, தமிழ் எழுத்துக்கள் அச்சிடப்படும் விதம் குறித்த ஆர்வத்தையும் வளர்த்தார். பாலா புத்தகங்களை தட்டச்சு செய்வதிலும், தட்டச்சு அமைப்பதிலும் தனது தந்தைக்கு உதவினார். இந்தக் காலகட்டத்தில் மரபு எழுத்துருக்கள் பயன்படுத்தப்பட்டன. பாலாவும் அவரது தந்தையும் சுமார் இரண்டு மரபு எழுத்துருக்களைக் கொண்டிருந்தனர். அவற்றினை தங்கள் புத்தகங்களை வெளியிடுவதற்குப் பயன்படுத்தினர். இந்தச் செயற்பாடுகளின் மூலம் பாலா ICT யில் ஆர்வத்தை வளர்த்தார்.

பாடசாலைக் கல்வியை முடித்த பின்னர், பாலாவின் தந்தை, அவரை அவுஸ்திரேலியாவில் உள்ள சார்லஸ் ஸ்டர்ட் பல்கலைக்கழகத்திற்கு தகவல் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற அனுப்பினார். திரு. பாலசந்திரனுக்கு அவுஸ்திரேலியாவின் சார்லஸ் ஸ்டர்ட் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப இளங்கலை (ஹானர்ஸ்) பட்டம் 2004 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

திரு. பாலசந்திரன் தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். எனவே அவர் இலங்கைக்கு திரும்பினார். பின்னர் மொறட்டுவ பல்கலைக்கழக கணினி விஞ்ஞானம் மற்றும் பொறியியல் துறையில் சிஸ்டம்ஸ் இன்ஜினியராக பணியாற்றத் தொடங்கினார்.
பேராசிரியர் கிஹான் டயஸ், இந்த காலகட்டத்தில் TechCERT இனை உருவாக்கினார். அத்துடன், அவர் LK டொமைன் பதிவேட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் இருந்தார்.

பேராசிரியர் கிஹான் டயஸின் கீழ் பாலா தனது முதுகலைப் பட்டப்படிப்பில் செயற்படத் தொடங்கினார். அவர் தனது பட்டப்படிப்புக்கு தேர்ந்தெடுத்த பகுதியில் ICT மற்றும் மொழி இரண்டின் கூறுகளும் இருந்தன; சிங்கள மொழியிலுள்ள பெயர்களை தமிழில் மொழிபெயர்க்கும் திட்டத்தில் பணிபுரிவது இந்த ஆராய்ச்சியில் அடங்கும். இந்தப் பணிக்காக தமிழ் மற்றும் சிங்கள மொழிகளின் ஒலியியல் மற்றும் இலக்கணம் குறித்து திரு. பாலசந்திரன் ஆய்வு செய்தார்.

உள்நாட்டு மொழிகள்

இந்த காலகட்டத்தில் இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) ஆனது தரநிலைப்படுத்தும் நோக்கில் தமிழ் விசைப்பலகை தளவமைப்பில் செயற்பட்டு வந்தது. பேராசிரியர் கிஹான் டயஸ் தலைமையிலான ICTA, அதன் உள்ளூர் மொழிகள் முன்முயற்சியின் கீழ், தமிழ் 99 என்ற விசைப்பலகை தளவமைப்பை இலங்கையில் உள்ள பயனர்களுக்கு அறிமுகப்படுத்த முயன்றது. “நீங்கள்-எழுதுவது போல் தட்டச்சு செய்” முறையின் அடிப்படையில் விசைப்பலகை தளவமைப்பை விரும்பிய பெரும்பாலான பயனர்களால் இந்த தளவமைப்பு நிராகரிக்கப்பட்டது. பேராசிரியர் கிஹான் டயஸ், பாலாவுக்கு மொழிகள் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வம் இருப்பதைக் குறிப்பிட்டார். எனவே அவரை ICTA இற்கு அறிமுகப்படுத்தினார். சிங்கள விசைப்பலகை தளவமைப்பு இறுதி செய்யப்பட்டு இலங்கை தரநிலை சிங்கள எழுத்துக்குறி தகவல் பரிமாற்றத்திற்கான குறியீடு, SLS 1134: 2004 இல் சேர்க்கப்பட்டுள்ளது. இது அரசாங்க அமைப்புகளில் பயன்படுத்தப்பட்டு வந்தது. லங்கா அரசு வலையமைப்பை செயல்படுத்தி வந்த ICTA குழு அவசர அவசரமாக நிலையான தமிழ் விசைப்பலகை அமைப்பு என்ன என்பதை அறிய விரும்பியது. இதன் விளைவாக, ICTA ஆனது தமிழ் விசைப்பலகை தளவமைப்பை உருவாக்குவது மற்றும் ஒரு தமிழ் தகவல் தொழில்நுட்பத் தரத்திற்கு வழிவகுக்கும் ஒரு திட்டத்தில் பணியாற்றுவது குறித்து திரு. பாலச்சந்திரனுடன் ஒப்பந்தம் செய்தது.

திரு. பாலச்சந்திரன், அதன் பின்னர் கிடைக்கக்கூடிய தமிழ் விசைப்பலகை தளவமைப்புகளை விரிவாக சரிபார்த்து, தனது படைப்புகளை ICTA இன் உள்ளூர் மொழிப் பணிக்குழுவுக்கு (LLWG) வழங்கினார். முன்மொழியப்பட்ட தளவமைப்பு “நீங்கள்-எழுதுவது போல் தட்டச்சு- செய்” முறையை அடிப்படையாகக் கொண்டது. ICTA வும் விரிவான ஆலோசனையை மேற்கொண்டது. பாராளுமன்றத்தில் ஒரு விசைப்பலகை இயக்கியுடன் பயனர்களுக்கு செயல் விளக்கம் செய்யப்பட்டது. முன்மொழியப்பட்ட விசைப்பலகை தளவமைப்பு, முக்கியமாக ரெங்கநாதன் விசைப்பலகை தளவமைப்பை அடிப்படையாகக் கொண்டது, பயனர்களால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதன்பிறகு, LLWG உடன் இணைந்து, ஒரு தமிழ் ICT தரநிலை வரைவை உருவாக்கும் பணியில் திரு.பாலசந்திரன் ஈடுபட்டார். இது இலங்கை தர நிர்ணய நிறுவனத்திற்கு (SLSI) முன்மொழியப்பட்டது, பொது ஆலோசனையின் பின்னர் SLSI இதை இலங்கை தரநிலை தகவல் பரிமாற்றத்திற்கான தமிழ் எழுத்து குறியீடாக ஏற்றுக்கொண்டது, அதாவது SLS 1326: 2008. தரநிலை பின்வருவனவற்றினை உள்ளடக்கியிருந்தது;

  1. கீயிங்-இன் தொடர்வரிசைகளுடனான விசைப்பலகை தளவமைப்பு.
  2. குறியாக்கமானது யூனிகோட் தரநிலை மற்றும் ISO/IEC 10646 உடன் சீரமைக்கப்பட்டது.
  3. தமிழ் அடுக்கு வரிசை.

தமிழில் தகவல்களைப் பட்டியலிடுவதற்கு வரிசைத்தொடர் தேவைப்பட்டது. இந்த காலகட்டத்தில் மும்மொழியிலான அரசாங்க தரவுத்தளங்கள் அமைக்கப்பட்டன. அத்துடன் ஒரு தமிழ் வரிசைத்தொடர் தேவைப்பட்டது. அவர் பல தமிழ் அகராதிகளை ஆராய்ந்தார். மேலும் தொடராக்க வரிசையில் சிறிய வேறுபாடுகள் இருந்தன என திரு. பாலச்சந்திரன் கூறுகின்றார். அவர் குறிப்பிட்ட ஒரு இடைவெளி என்னவென்றால், இந்த அகராதிகளில் தமிழ் எண்களுக்கு எந்த நிலைகளும் இல்லை என்பதாகும். வரிசைத் தொடரானது விரிவான ஆலோசனையின் பின்னர் தரநிலைப்படுத்தப்படத் தீர்மானிக்கப்பட்டது.

இந்த முக்கிய விளைவுகளுக்கு மேலதிகமாக. திரு. பாலச்சந்திரன் ஒரு தமிழ் எழுத்துருவை உருவாக்குவதில் ICTA உடன் பணியாற்றினார். யுனிகோட் தமிழ் எழுத்துருவை உருவாக்க ICTA இற்கு தேவையேற்பட்டது. எழுத்துரு ஒரு “தீவிரமான” எழுத்துருவாக இருக்க வேண்டும், இது ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் மற்றும் அரசாங்க அமைப்புகளில் பயன்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு கிளிஃப் உம், மாற்றிகளுடன் ஏற்றுக்கொள்ளக்கூடிய தரநிலையைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் கவனமாக வரையறுக்கப்பட வேண்டும். எனவே, திரு.பாலசந்திரன் கடந்த 100 ஆண்டுகளின் தமிழ் நூல்களில் ஒவ்வொரு தசாப்தத்திற்கும் ஆன தமிழ் நூல்களைச் சேகரித்தார். ஒவ்வொரு எழுத்துக்களும் எப்படி இருந்தன என்பதைக் கவனமாக ஆய்வு செய்து, ஒவ்வொரு எழுத்திற்கும் வடிவம் வரையப்பட்டு எழுத்துரு உருவாக்கப்பட்டது. இதன் விளைவாக, சிறீதமிழ் என்ற எழுத்துருவை ICTA வெளியிட்டது.

இப்போது தமிழ் பின்னங்களின் பகுதி மற்றும் குறியீடுகளில் எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை என்று திரு.பாலசந்திரன் கூறுகிறார். “டெபிட்”, “கிரெடிட்”, மேலே உள்ளவை “போன்ற சொற்களைக் குறிக்க குறிப்பிட்ட குறியீடுகள் உள்ளன என்று அவர் விளக்குகிறார். கடந்த 300 ஆண்டுகளில் இதுபோன்ற 60 குறியீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் விளக்குகிறார். தட்டச்சுப்பொறிகள் மற்றும் கணினிகள் போன்ற தொழில்நுட்பங்களின் வளர்ச்சி காரணமாக, இந்த எழுத்துத் திட்டங்களில் இந்தக் குறியீடுகளைச் சேர்க்க முடியவில்லை. பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டதால் இவற்றுக்கு உரிய இடம் வழங்கப்பட வேண்டும் என்று திரு. பாலச்சந்திரன் கருதினார். திரு. பாலச்சந்திரன் சுமார் 5 ஆண்டுகள் இதில் பணியாற்றினார் அத்துடன் 70 முதல் 80 வரையிலான பின்னங்கள் மற்றும் குறியீடுகளைச் சேகரித்தார். இவை யுனிகோட் தரநிலையில் சேர்க்கப்பட வேண்டும் என்பதே இதன் நோக்கம். மற்றய நாடுகளைச் சேர்ந்த பலர் இவற்றில் பணிபுரிந்தனர். இதன் விளைவாக, பல நாடுகளில் இருந்து ஒரு கூட்டுத் திட்டம் இந்தியா வழியாக சமர்ப்பிக்கப்பட்டது, இறுதியாக 2019 ஆம் ஆண்டில், இந்த தமிழ் பின்னங்கள் மற்றும் குறியீடுகள் யுனிகோட் தரநிலையில் சேர்க்கப்பட்டன.

திரு. பாலச்சந்திரன் இலங்கைத் தமிழ் மொழியிலும் ICTA உடன் பணிபுரிந்தார். ICTA ஆனது யுனிகோட் கூட்டமைப்பிற்கு மின்னஞ்சல் அனுப்பியது மற்றும் தமிழ்-இலங்கை, Ta_LK, அதன் பொதுவான மொழித் தரவு களஞ்சியத்தில் (CLDR) சேர்க்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, Ta_LK என்ற மொழி தொடர்பான தகவல்கள் விரிவாக விவாதிக்கப்பட்டு, ஒப்புக் கொள்ளப்பட்டு, CLDR இல் பதிவேற்றப்பட்டன.

திரு. பாலச்சந்திரன் சர்வதேசமயமாக்கப்பட்ட டொமைன் பெயர்களில் (IDNs) பணியாற்றிய குழுவில் ஒரு பாகமாக இருந்தார். இந்த வேலையின் மூலம் .LK க்கு சமமான தமிழில் ஒரு உயர்மட்ட டொமைன் பெயர் ஒரு பொது ஆலோசனை பொறிமுறையின் மூலம் வரையறுக்கப்பட்டது, விவாதிக்கப்பட்டது மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ICTA உடனான உள்ளூர் மொழிகள் குறித்த இந்த பணிகள் அனைத்தும் 2006 மற்றும் 2012 ஆண்டுகளுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்டன. பெரும்பாலான அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன, மேலும் தரநிலைகள் உள்ளன, இதன் முடிவுகள் அரசு நிறுவனங்கள், இலங்கையின் பல்வேறு சமூகங்கள் மற்றும் பிற பயனர்களால் பயன்படுத்தப்படுகின்றன என திரு. பாலச்சந்திரன் கூறுகின்றார்.

சைபர் பாதுகாப்பு

உள்ளூர் மொழிகள் தொடர்பான பணிகளுக்கு மேலதிகமாக, சைபர்-பாதுகாப்பு பகுதியிலும் திரு. பாலச்சந்திரன் ஈடுபட்டுள்ளார். திரு. பாலச்சந்திரன் 2006 இல் மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் சேர்ந்ததாகவும், இந்த காலகட்டத்தில் பேராசிரியர் கிஹான் டயஸ் TechCERT இனை உருவாக்கிக் கொண்டிருந்ததாகவும் இவர் விளக்குகிறார். 2009 ஆம் ஆண்டளவில், இணையப் பாதுகாப்பு ஒரு முக்கிய பகுதியாக மாறியது. திரு. பாலச்சந்திரன் ஒரு நெறிமுறை ஊடுருவல் விற்பன்னராக சான்றிதழ் பெற முடிந்தது. பின்னர் 2011 இல், அவர் கணினி ஹேக்கிங் தடயவியல் ஆய்வாளராக சான்றிதழ் பெற்றார். அதன்பிறகு, திரு. பாலச்சந்திரன் சைபர்-பாதுகாப்பு பகுதிக்கு மாறினார். இந்த காலகட்டத்தில் இலங்கை மத்திய வங்கியானது இலங்கை CERT உடன் இணைந்து CSIRT வங்கியினை (கணினி பாதுகாப்பு நிகழ்வு மறுமொழிக் குழு) அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. இந்த CSIRT நிதி நிறுவனங்களுக்கு பிரத்யேகமானதாக இருக்க வேண்டும். இதன் விளைவாக, 30 ஜூன் 2014 அன்று, வங்கி CSIRT தொடங்கப்பட்டது. இது நிதித்துறைக்கு பிரத்யேகமான முதல் தெற்காசிய CSIRT ஆகும். திரு. பாலச்சந்திரன் CSIRT வங்கியின் முதல் பணியாளராக நியமிக்கப்பட்டார். இது அவருக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக இருந்தது என்று அவர் கூறுகிறார்.

திரு. பாலச்சந்திரன், இறுதியாக அவர் இந்த பயணத்தின் ஒரு பகுதியாக இருந்ததில் மகிழ்ச்சியடைவதாகக் கூறுகிறார். அவர் தற்போது டயலொக் ஆக்சியாடாவில்(Dialog Axiata) சைபர் பாதுகாப்புத் தலைவராக உள்ளார். இந்த முக்கிய இலக்குகளை அடைய உதவிய அனைவருக்கும் அவர் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கின்றார்.